புதுடெல்லி,
ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த பிறகு, மத்திய அரசு ரூ.2,000 நோட்டுகளை அச்சடித்தது. இப்போது, ரூ.2,000 நோட்டுகள் பதுக்கப்படுவதாக அரசு கூறுகிறது. பதுக்கல்காரர்களுக்கு உதவுவதற்காகவே ரூ.2,000 நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது என்று நமக்கு ஏற்கனவே தெரியும்.
ரொக்க தட்டுப்பாடு இல்லை என்று ரிசர்வ் வங்கி கூறுவது திருப்திகரமாக இல்லை. ரிசர்வ் வங்கி போதுமான பணத்தை அச்சடித்து வெளியிட்டு இருந்தால், ஏன் தட்டுப்பாடு நிலவுகிறது என்று விளக்க வேண்டும். பணமதிப்பு நீக்க பேய் மத்திய அரசை உலுக்குவதற்காக மீண்டும் வந்து விட்டது.
அறுவடைக்கு பிந்தைய பணத்துக்கான தேவையை ரிசர்வ் வங்கி தவறாக கணக்கிட்டு விட்டதாக கருதுகிறேன். பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு, வெறும் 2.75 சதவீத ரொக்க புழக்கம்தான் அதிகரித்து இருக்கிறது என்பது உண்மைதானா? அது உண்மையாக இருந்தால், ரொக்க புழக்கத்தை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அதிகரிக்க விடவில்லை என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.
சாதாரண மக்கள், ஏ.டி.எம்.களில் பணத்தை எடுத்துக் கொண்டாலும், வங்கியில் திரும்ப பணத்தை போடுவதில்லை என்று நான் சந்தேகப்படுகிறேன். வங்கி மோசடிகளால் வங்கி நடைமுறைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது என்பது இதற்கு காரணமாக இருக்கலாம்.
மின்னணு பண பரிமாற்றத்தை நான் ஆதரிக்கிறேன். ஆனால், அதை வேகப்படுத்த மத்திய அரசு கட்டாயப்படுத்தக்கூடாது. ரொக்க புழக்கத்தை தன்னிச்சையாக குறைக்கக்கூடாது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா கூறியதாவது:-
நிர்வாகத்தில் கவனம் செலுத்தாமல், மத்திய அரசு 24 மணி நேரமும் அரசியல் செய்து வருகிறது. அன்றாட தேவையில் 6-ல் ஒரு பங்கு பணம்தான் வங்கியில் இருக்கிறது. இதைக் கேட்டால், இது தற்காலிக நிலவரம் என்று மட்டுமே அரசு சொல்கிறது.
வங்கியில் போட்டிருக்கும் பணம் குறித்து மக்கள் பாதுகாப்பற்ற உணர்வில் இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் வாராக்கடன் அதிகரித்து விட்டது. பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு, எவ்வளவு பணம் வங்கிக்கு திரும்பி வந்தது என்பதை ரிசர்வ் வங்கி இன்னும் சொல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.