புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் 22-ந் தேதியில் இருந்து ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சரக்கு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச்செல்ல கடந்த 1-ந் தேதியில் இருந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, சில குறிப்பிட்ட நகரங்களுக்கிடையே மட்டும் முதல்கட்டமாக நேற்று சிறப்பு ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
இதற்கான டிக்கெட் முன்பதிவு, நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு நடந்தது. ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் மட்டும் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், ரூ.16 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக இந்திய ரெயில்வே நிர்வாகம் நேற்று தெரிவித்தது. 45 ஆயிரத்து 533 பி.என்.ஆர். எண்களுடன் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த டிக்கெட்டுகளை பயன்படுத்தி, ஒரு வாரத்தில் 82 ஆயிரத்து 317 பேர் சிறப்பு ரெயில்களில் பயணம் செய்வார்கள் என்று ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
நேற்று 8 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. டெல்லியில் இருந்து திப்ருகர், பெங்களூரு, பிலாஸ்பூர் ஆகிய நகரங்களுக்கும், ஹவுரா, பாட்னாவின் ராஜேந்திர நகர், பெங்களூரு, மும்பை சென்டிரல், ஆமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து டெல்லிக்கும் இந்த ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில்களில் குளிர்சாதன பெட்டிகள் மட்டும் இணைக்கப்பட்டு இருந்தன.
பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அவற்றை பின்பற்றி பயணிகள் பயணம் செய்தனர்.