புதுடெல்லி,
நாட்டில் வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிதி திட்டத்தை நிறைவேற்ற மத்திய மந்திரிசபை ஏற்கனவே ஒப்புதல் அளித்து உள்ளது.
இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். அப்போது பிரதமர்-விவசாயிகள் திட்டத்தின் கீழ் 6-வது தவணையாக 8.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி வழங்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்துள்ளார்.
இதன்பின்பு பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே இன்று பேசும்பொழுது, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், ஒரே தவணையில் நாட்டிலுள்ள 8.5 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.17 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டு உள்ளது.
இடைத்தரகர்களோ அல்லது கமிஷனோ கிடையாது. நிதியானது நேரடியாக விவசாயிகளை சென்றடைந்து உள்ளது. இதனால் நான் திருப்தியடைந்து உள்ளேன். ஏனெனில் திட்டத்தின் சாராம்சம் பூர்த்தி அடைந்து உள்ளது என கூறியுள்ளார்.