தேசிய செய்திகள்

கேரளாவில் நிபா வைரஸுக்கு 2-வது பலி;தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரம்

நிபா வைரஸ் பாதித்து இறந்த நபரின் வீட்டை சுற்றி 3 கி.மீ. சுற்றளவு தூரம் உள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலப்புரம்,

கேரளாவில் ஆண்டுதோறும் சீசன் போல் நிபா வைரஸ் பரவல் இருந்து வருகிறது. குறிப்பாக கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக பாதிப்பு இருந்து வருகிறது. இதில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

இந்தசூழ்நிலையில் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே குமரமபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 58 வயது நபர். இவர், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், அவருக்கு குணமாகவில்லை. இதையடுத்து அவர், மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னா அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் திரவ மாதிரிகளை சேகரித்து பரிசோதித்ததில் அவர் நிபா வைரஸ் பாதித்து இறந்தது தெரியவந்தது. இதனை உறுதி செய்வதற்காக அவரது உடல் திரவ மாதிரிகள் புனேவில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து மாநில சுகாதாரத்துறை நிபா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக மாவட்ட சுகாதாரத்துறையால் நிபா வைரஸ் பாதித்து இறந்த நபரின் வீட்டை சுற்றி 3 கி.மீ. சுற்றளவு தூரம் உள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள பகுதிக்குள் வெளியில் இருந்து நபர்கள் வரவும், இங்குள்ள மக்கள் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் இறந்த நபருடன் தொடர்பில் இருந்த நபர்களின் பட்டியல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே நிபா அறிகுறிகளுடன் பெரிந்தல்மன்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாலக்காடு மாவட்டம் தட்சநாட்டுகரா பகுதியை சேர்ந்த நபரின் நிலை மோசமாக உள்ளதாகவும், தற்போது கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்