புதுடெல்லி,
இந்தியாவில் தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும், ஒரு சில மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது.
இதற்கிடையில் அரசியல் தலைவர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள் உள்ளிட்ட பொதுப்பணிகளில் இருப்பவர்களும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். அண்மையில் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் தற்போது பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான உமாபாரதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனக்கு கடந்த 3 நாட்களாக லேசான காய்ச்சல் இருந்ததாகவும், மருத்துவ பரிசோதனையில் தனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உமாபாரதி, தன்னைச் சார்ந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், மீண்டும் நான்கு நாட்கள் கழித்து இன்னொரு முறை பரிசோதனை செய்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்.