தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரம் ; ம.பி அரசியல் நெருக்கடி பற்றி சிவராஜ் சிங் சவுகான் கருத்து

மத்தியபிரதேசத்தில் ஜோதிர்ஆதித்ய சிந்தியா மற்றும் அவருக்கு ஆதரவான 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை காணவில்லை. அதனால் கமல்நாத் அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

போபால்,

மத்தியபிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால், சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 3 மாநிலங்களவை காலியிடங்களுக்கு 26-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில், நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர்ஆதித்யா சிந்தியாவையும், அவருடைய ஆதரவாளர்களாக கருதப்படும் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் காணவில்லை. சிந்தியாவின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை. இதுபோல், 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தனர்.

இவர்களில், சிந்தியாவின் ஆதரவாளர்களாக கருதப்படும் 6 மந்திரிகளும் அடக்கம். அவர்களின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. 17 பேரும் பெங்களூருக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு, ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் முதல்- மந்திரி கமல்நாத்தே நீடித்து வருகிறார். மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற ஜோதிர் ஆதித்ய சிந்தியா காய் நகர்த்தி வருகிறார். இதுதொடர்பாக அவருக்கும், கமல்நாத்துக்கும் இடையே மோதல் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பின்னணியில், சிந்தியாவும், அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ.க் களும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து கேட்டபோது, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர், கவலைப்பட ஒன்றும் இல்லை என்று பதில் அளித்தார். இதற்கிடையே, கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்த டெல்லி சென்றிருந்த முதல்-மந்திரி கமல்நாத், இந்த பிரச்சினையை தொடர்ந்து, தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு போபாலுக்கு திரும்பினார்.

இந்த விவகாரத்தால் மத்திய பிரதேச அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. இந்த சூழலில் இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது;- காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரம் இது. இது குறித்து கருத்து கூற நான் விரும்பவில்லை. அரசை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்பதை முதல் நாளில் இருந்தே நான் கூறி வருகிறேன் என்றார்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்