புதுடெல்லி,
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 7-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளில் அரசு இறங்கியுள்ளது.
உக்ரைனின் அண்டை நாடுகளான ரூமேனியா, போலந்து, ஹங்கேரி, சுலோவாகியா ஆகியவற்றுக்கு இந்தியர்களை வரவழைத்து அங்கிருந்து அவர்கள் மீட்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். ஆபரேஷன் கங்கா என்ற இந்த மீட்பு பணியை மேற்பார்வையிட 4 மத்திய மந்திரிகளை பிரதமர் மோடி அனுப்பி வைத்துள்ளார். மீட்பு பணியில் ஒட்டுமொத்த அரசு எந்திரமும் 24 மணி நேரமும் இயங்கி வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்திய மந்திரிகள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, ஜெனரல் (ஓய்வு) விகே சிங் மற்றும் கிரண் ரிஜிஜு ஆகியோரை முறையே உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா-மால்டோவா, போலந்து மற்றும் ஸ்லோவாக் குடியரசு ஆகிய நாடுகளுக்கும் அனுப்பியுள்ளது. இந்தியாவிலுள்ள விமான நிலையங்களிலும் மத்திய மந்திரிகள் முகாமிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து விமானம் மூலம் தாயகம் திரும்பிய இந்திய மாணவர்களை மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி வரவேற்றார். இதில் வினோதம் என்ன்வென்றால் அவர் 4 மொழிகளில் பேசி அவர்களை வரவேற்றார். இதனால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்த சம்பவத்தை அவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அவர் இந்தியா வந்தடைந்த இண்டிகோ விமானத்தின் உள்ளே சென்று மாணவர்களை 4 மொழிகளிலும் வரவேற்று பேசினார். மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி மலையாளம், வங்காளம், குஜராத்தி மற்றும் மராத்தி ஆகிய நான்கு மொழிகளில் பேசினார்.