புதுடெல்லி,
டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனை சில அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள ரோபோக்களை வாங்குவது என முடிவு செய்துள்ளது. ஒரு ரோபோவின் விலை ரூ.18 கோடி என திட்ட மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் உதவி கொண்டு ஏழைகளின் வசதிக்காக இலவச அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் ரோபோ மேற்கொள்ளும் சிகிச்சைக்கு 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
அறுவை சிகிச்சை உபகரணங்கள் ரோபோவின் கரங்களில் வைக்கப்பட்டு இருக்கும். சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவரின் முன்னால் திரை ஒன்று இருக்கும். அதில் நோயாளியின் உடல் முப்பரிமாணத்தில் தெரியும். கன்சோலில் (எலெக்ட்ரானிக் கருவி) மருத்துவர் கைகளால் மேற்கொள்ளும் இயக்கங்கள் ரோபோ கரங்களுக்கு பரிமாற்றம் செய்யப்படும். இந்த சிகிச்சை முறை முழுவதிலும், 3டி புகைப்படங்களை லைவாக மருத்துவரின் கன்சோலுக்கு கேமிரா அனுப்பி கொண்டிருக்கும். இது லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை போன்றது.
இந்த ரோபோக்களை கொண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், சில புற்றுநோய் சிகிச்சைகள் மற்றும் அனைத்து சிக்கலான மறுசீரமைப்பு சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும். இது நன்றாக செயல்பட்டால் மற்ற துறைகளுக்கும் கூடுதலாக ரோபோக்கள் வாங்கப்படும். இதனால் அறுவை சிகிச்சைக்கான நேரம் அதிகளவில் குறையும்.