புதுடெல்லி,
ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் கட்டுமான துறை, கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு டன் டி.எம்.டி. கம்பியின் விலை ரூ.50 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனிடையே இரும்பு பொருட்களின் விலை ஏற்றத்தால் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் இரும்பு பொருட்களின் விலை ஏற்றத்துக்கான காரணம் குறித்து இரும்பு உற்பத்தியாளர்களின் அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக இந்திய இரும்பு சங்கம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இரும்புத்தாது, மூலப்பொருட்களின் விலை உயர்வு, உலகளாவிய இரும்பு வினியோகத்தில் பற்றாக்குறை மற்றும் கொரோனாவால் தூண்டப்பட்ட இடையூறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் இரும்பு தொழில் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
கொரோனா இடையூறுகளை அடுத்து தற்காலிக இரும்பு பற்றாக்குறை காரணமாக சர்வதேச விலை ஒரு டன்னுக்கு 750 அமெரிக்க டாலர்கள் உயர்ந்தன. இந்தியா ஒரு திறந்த பொருளாதாரம் என்பதால் நாட்டில் இரும்பு விலைகள் உலகளாவிய விலைகளுடன் உயர்கின்றன என கூறப்பட்டுள்ளது.
மேலும் மூலப்பொருட்களின் வினியோகத்தில் ஒரு நிலையான தன்மை உருவாகும் வரை இரும்புத் தாது ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என இந்திய இரும்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
2020 ஜூன் டிசம்பர் காலகட்டத்தில் இரும்புத்தாது விலை ஒரு டன்னுக்கு ரூ.1,960-ல் இருந்து ரூ.4,160 ஆக அதிகரித்துள்ளது என்றும், எனவே அடுத்த 6 மாத காலத்துக்கு இரும்பு தாது ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.