புதுடெல்லி,
தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள வெளிநாட்டு மணலை வாங்கியதற்கான தொகையை ஒரு வாரத்துக்குள் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, ராமியா எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம் மலேசியாவில் இருந்து 55 ஆயிரம் டன் மணலை இறக்குமதி செய்தது. அந்த மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டது.
அதில், தனியார் நிறுவனங்கள் மணல் விற்பனையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டதுடன், பொதுப்பணித்துறை மூலமே மணல் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த மணலை சாலை வழியாக பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவின் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட மணல் தூத்துக்குடி துறைமுகத்திலேயே வைக்கப்பட்டது.
இந்நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட மணலை வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் அல்லது தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என ராமியா எண்டர்பிரைசஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு மணலை ஆய்வு செய்து வாங்கிக் கொள்ள ஒப்புதல் அளித்தது. டன் ஒன்றுக்கு ரூ.2,050 வீதம் 55 ஆயிரம் டன் மணலையும் கொள்முதல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இறக்குமதி மணலை வாங்கியதற்கான முழு தொகையையும் ஒருவார காலத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டில் செலுத்த தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல்ரோகத்கி, தமிழக அரசு இந்த மணலை விற்பனை செய்ய வேண்டும். அதன்பின்னர் தான் அதற்கான தொகையை கட்டமுடியும். எனவே இதற்கு 8 வாரம் அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் ஏற்கனவே உரிய அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. மீண்டும் அவகாசம் தேவை என்றால் மணலுக்கான தொகையுடன் 18 சதவிகித வட்டியும் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவித்ததுடன், தொகை அதிகமாக உள்ளதால் குறைந்தது 4 வாரம் அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், இந்த தொகை அதிகமாக உள்ளது என்றால், பெட்ரோல் செலவை தமிழக அரசு எவ்வாறு சமாளிக்கிறது என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்பியதோடு, தமிழக அரசு இன்னும் ஒரு வாரத்தில் மணலுக்கான முழு தொகையையும் சுப்ரீம் கோர்ட்டில் செலுத்த வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.