புதுடெல்லி,
2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் பல கிலோ மீட்டர்கள் வரை ஊடுருவிச் சென்ற இந்திய ராணுவ வீரர்கள் ஜெய்ஷ்-இ முகமது இயக்க பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்று குவித்தனர். இந்தநாள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் (துல்லிய தாக்குதல்) தினமாக கருதப்படுகிறது.
இத்தினத்தை வருகிற 29-ந்தேததி உயர்கல்வி நிறுவனங்கள் விழாவாக கொண்டாடும்படியும், இதையொட்டி முன்னாள் ராணுவ அதிகாரிகள் சிறப்புரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யுமாறும் பல்கலைக்கழக மானியக் குழு அண்மையில் சுற்றறிக்கை அனுப்பியது. இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் துல்லிய தாக்குதல் விஷயத்தை மோடி அரசு அரசியலாக்குகிறது. இதுபோன்ற உத்தரவுகளால் பல்கலைக்கழக மானிய குழுவை சீரழிக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
இதை மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று மறுத்தார். அவர் இதுபற்றி கூறுகையில், மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்த யோசனையின் அடிப்படையில்தான் துல்லிய தாக்குதல் தினத்தை கொண்டாடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. நாங்கள் எந்த கல்வி நிறுவனத்தையும், மாணவர்களையும் கட்டாயப்படுத்தவில்லை. விரும்புகிறவர்கள் மட்டுமே கொண்டாடும்படி கூறப்பட்டு உள்ளது. இதில் எந்த அரசியலுக்கு இடமே இல்லை. தேசப்பற்று மட்டுமே உள்ளது என்றார்.