புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை 2 கட்டங்களாக கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விவாதம் பிப்ரவரி 2, 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் நடைபெறும். இதுதொடர்பாக மக்களவையின் அலுவல் ஆலோசனை குழு இன்று கூடி முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி பிப்ரவரி 4-ந்தேதி மக்களவையில் பதில் உரை அளிப்பார்.
பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, நாடு, சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறியிருக்கிறது என்றார். இந்தியாவின் வலுவான வளர்ச்சி பாதையை குறிப்பிட்ட அவர், இந்த காலாண்டு மிக நேர்மறையாக தொடங்கியிருக்கிறது என்றும் சுய சார்பு இந்தியாவானது, உலகத்திற்கு இன்று நம்பிக்கைக்கான ஒளியாக உள்ளது என்றும் கூறினார்.
இந்த சூழலில், நேற்று முன்தினம் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தின்போது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், தேர்தல் தொடர்பாக நடந்து வரும் எஸ்.ஐ.ஆர். பணிகள் மற்றும் பல்கலைக்கழக மானிய குழு சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதுதொடர்பாக மக்களவையில் இன்றும் அமளி ஏற்பட்டது. இதற்கு மத்தியில் நாடாளுமன்றத்தில், 2025-26 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார்.
இதனை குறிப்பிடும் வகையில் பேசிய பிரதமர் மோடி, இது தீர்வு காண வேண்டிய நேரம் என்றும், அதற்கு பதிலாக தடைகளை ஏற்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல என்றும் கூறினார். எதிர்க்கட்சிகளின் அமளியை தொடர்ந்து, பிப்ரவரி 1-ந்தேதிக்கு மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.