புதுவை சட்டசபை தேர்தல் முடிவில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் (10), பா.ஜ.க. (6) அதிக இடங்களை கைப்பற்றின.
ரங்கசாமி கண்டிப்பு
என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் கடந்த (மே) மாதம் 7-ந்தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவி ஏற்றுக் கொண்டார்.அப்போது அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் துணை முதல்-அமைச்சர் உள்ளிட்ட 3 அமைச்சர்கள், சபாநாயகர் பதவிகளை கேட்டு பா.ஜ.க. பிடிவாதம் காட்டியது.ஆனால் ரங்கசாமி துணை முதல்- அமைச்சர் என்பதை விட்டு விட்டு பேச்சு நடத்துமாறு கண்டிப்புடன் கூறி விட்டார். இதுகுறித்து பல்வேறு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்து வந்தது.
அரசியல் சர்ச்சை
இந்தநிலையில் சபாநாயகர், 2 அமைச்சர்கள் பதவி தர ரங்கசாமி சம்மதித்தார். இதை பா.ஜ.க.வும் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டது. அதன்பிறகு முக்கிய இலாகாக்களை பா.ஜ.க. கேட்டு வந்தது. அதற்கும் ரங்கசாமி பிடி
கொடுக்காமல் நழுவினார்.இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் ஒரு மாதத்துக்கு மேலாகியும் அமைச்சரவை பதவி ஏற்காதது புதுவை அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. புதுவையுடன் சேர்ந்து நடத்தப்பட்ட தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றுக் கொண்டன. அதேநேரத்தில் கொரோனா தொற்று காலத்தில் தீவிர தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் புதுச்சேரியில் இன்னும் அமைச்சரவை பதவி ஏற்காதது மக்களின் விமர்சனத்துக்கும் உள்ளானது.
பா.ஜ.க. ஆலோசனை
இந்தநிலையில் கடந்த வாரம் பா.ஜ.க. மேலிடப்பார்வையாளர் ராஜீவ் சந்திர சேகர் எம்.பி. புதுவை வந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். முதலில் மணவெளி தொகுதி எம்.எல்.ஏ., ஏம்பலம் செல்வத்தை சபாநாயகராக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் தயக்கம் காட்டியதால் நியமன எம்.எல்.ஏ. ஒருவரின் பெயர் பரிசீலனை செய்யப்பட்டது. அதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பிரச்சினையும் தாமதத்துக்கு காரணமானது. இதையடுத்து பா.ஜ.க. மேலிடம் இந்த பிரச்சினையில் தலையிட்டு மீண்டும் ஏம்பலம் செல்வத்தை சபாநாயகராக நியமிப்பது என முடிவு செய்தது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் பா.ஜ.க. மேலிடம் தெரிவித்தது.
16-ந்தேதி கூடுகிறது
அதன்படி சபாநாயகர் தேர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கான நடவடிக்கையை புதுவை அரசு மேற்கொண்டது. இது தொடர்பான கோப்புகள் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்ததும் சபாநாயகர் தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் அறிவிக்க உள்ளார்.தற்போதைய சூழ்நிலையில் வரும் 16-ந்தேதி (புதன் கிழமை) சட்டசபை கூடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அன்றைய தினம் சபாநாயகர் தேர்தல் நடைபெறும். இதில் போட்டி இருந்தால் தேர்தல் நடத்தப்படும். ஆளுங்கட்சி தரப்பில் சபாநாயகர் பதவிக்கு ஏம்பலம் செல்வம் போட்டியிட உள்ளார். எதிர்க்கட்சிகள் தரப்பில் போட்டியிடாவிட்டால் போட்டியின்றி ஏம்பலம் செல்வம் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு
அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் சபாநாயகரை அவரது இருக்கையில் அமர வைத்து வாழ்த்திப் பேசுவார்கள். தொடர்ந்து சபாநாயகர் தனது ஏற்புரையை நிகழ்த்துவார். சபாநாயகர் தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. இடையே அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான பிரச்சினைகள் தற்போது பேசி தீர்வு காணப்பட்டு இருக்கும் என்பதால் இனி இதில் இழுபறிக்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.