விஜயாபுரா,
கேரளாவில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட வரலாறு காணாத சேதத்தை அடுத்து, அதனை தீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்ட இயற்கை பேரழிவை கருத்தில் கொண்டு தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறி இருந்தது.
மேலும் கேரள மாநிலத்தில் கன்னூர்,வயநாடு, பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்கள் அதிக அளவு பாதிப்பு அடைந்தன. இதனால், 31 சதவீத வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்த ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மெதுவாக இயல்பு நிலை சரியாகிவரும் நிலையில், மாட்டிறைச்சி சாப்பிடும் திருவிழா நடத்தப்பட்டதால் தான் கேரளாவில் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியது என கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ.,வும், முன்னாள் மத்திய அமைச்சருமான பசன்கவுடா படில் யட்னல் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், இந்து மதத்தின் உணவர்வுகளை பாதிக்கும்படி நடந்துகொண்டால் மதமும் தண்டிக்கும், இயற்கையும் தண்டிக்கும், உதாரணமாக கேரளாவை எடுத்துக்கொள்ளுங்கள் அங்கு இருப்பவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நேரடியாக ஆதரித்தனர். போன வருடம் இதே நேரம் அங்கு மாட்டிறைச்சி திருவிழா நடைபெற்றது. ஆனால் தற்போது அதேநாளில் இன்று கேரளாவின் நிலையை பாருங்கள் என சர்சைக்குரியவகையில் பேசியுள்ளார். மேலும் கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும், எட்டியூரப்பா முதல்வர் ஆவார். பாஜக ஆட்சியை பிடித்த பின்னர் மாடு வதை செய்யப்படுவதற்கு தடை கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.