தேசிய செய்திகள்

மராட்டிய மாநில தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த அரசுக்கு சபாநாயகர் யோசனை

மராட்டியத்தில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என்று மாநில அரசுக்கு சபாநாயகர் நானா படோலே யோசனை தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இவ்வாறு குறை கூறும் எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்து வந்தது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்த முறைகேடும் செய்ய வாய்ப்பு இல்லை என்று மத்திய தேர்தல் கமிஷனும் திட்டவட்டமாக கூறியது.

இந்தநிலையில் மராட்டியத்தில் சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சதீஷ் உகே என்பவர் சபாநாயகர் நானா படோலேவுக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை பரிசீலித்த சபாநாயகர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி பல்தேவ் சிங்குடன் ஆலோசனை நடத்தினார். இதில் மருத்துவ கல்வி மந்திரி அமித் தேஷ்முக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் சபாநாயகர் நானா படோலே தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஓட்டுப்போடுவது வாக்காளர்களின் அடிப்படை உரிமை. அது வாக்குச்சீட்டு முறையிலா? அல்லது மின்னணு எந்திரத்திலா? என்பதை வாக்காளர்களின் விருப்பத்துக்கு விட வேண்டும். அதன்படி இரு மாதிரியிலும் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். இது தொடர்பாக சட்டத்தை உருவாக்குமாறு மாநில அரசை கேட்டுக்கொண்டு உள்ளேன். அவர்கள் தான் சட்டத்தை உருவாக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து பலர் சந்தேகம் எழுப்பி இருந்தனர். எனவே எந்த முறையில் வாக்களிக்க வேண்டும் என்பது வாக்காளர்களின் விருப்பமாக தான் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு