பரேலி,
துபாயில் தையல் வேலை பார்த்து வந்த ஷாருக் (வயது 22) சமீபத்தில் பரேலிக்கு வந்தார். நேற்று இரவு ஷாருக், தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து போலாபூர் ஹதோலியா கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தார். இவர்களை பார்த்த அந்த கிராமத்தினர், இவர்கள் எருமை ஒன்றை திருடியதாக நினைத்து சுற்றிவளைத்தனர். உடனே ஷாருக்குடன் வந்த 3 பேரும் தப்பி ஓடினர். ஷாருக்கை பிடித்த கிராமத்தினர் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பரேலி போலீசார், 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 15க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். இதைப்போல எருமை திருடியதாக கிராமத்தினரும் ஷாருக் மற்றும் நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே ஷாருக் பிரதேச பரிசோதனை அறிக்கையில் அவருக்கு உள்காயம் அதிகமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் பலத்த காயம் நேரிட்டு இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.