புதுடெல்லி,
கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மிக முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்காக, இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் ரூ.3 ஆயிரத்து 546 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதற்காக லஞ்சம் கைமாறியதாக வெளியான தகவலால், இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பிறகு அந்த நிறுவனம் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இந்தநிலையில், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பின்மெக்கானிக்காவை ஊழல் நிறுவனம் என்று மோடியும், போலி நிறுவனம் என்று அமித்ஷாவும் முன்பு கூறினர். ஆனால், 2014-ம் ஆண்டே அந்நிறுவனத்தை கருப்பு பட்டியலில் இருந்து விடுவித்தனர்.
இப்போது, அந்த நிறுவனத்துடன் வர்த்தக பேரம் மேற்கொள்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதில் என்ன ரகசிய பேரம் நடந்தது? நீங்கள் ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய நிறுவனத்துடன் இப்போது உடன்பாடு செய்தால் தவறில்லையா? என்று அவர் கூறியுள்ளார்.