புதுடெல்லி,
கொரோனா பரவலை தொடர்ந்து சர்வதேச விமான போக்குவரத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதேநேரம் 25-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஏர் பபுள் முறையில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சிவில் விமான போக்குவரத்து செயலாளர் ராஜீவ் பன்சால், சர்வதேச விமான போக்குவரத்து மீதான தடை விரைவில் நீக்குவதற்கான வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், தற்போதைய ஏர் பபுள் முறையில் போதுமான விமானங்கள் இயக்கப்படுவதால், சர்வதேச விமான பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. விசா கட்டுப்பாடுகள் காரணமாக சர்வதேச வழித்தடங்களில் விமான போக்குவரத்துக்கான கூடுதல் தேவை இல்லை என்று தெரிவித்தார். கொரோனாவுக்கு முன்பு இருந்தது போன்ற தேவைகள் ஏற்பட்டால், சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை விலக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.