தேசிய செய்திகள்

‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் அரசியல் கலப்பு இல்லாமல், மக்களை பற்றி பேசுகிறேன் - பிரதமர் மோடி உரை

‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் அரசியல் கலப்பு இல்லாமல், மக்களை பற்றி பேசுவதாக அதன் 50-வது பகுதி ஒலிபரப்பில் பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய வானொலியில் மன் கி பாத்(மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இதன், 50-வது பகுதி நேற்று ஒலிபரப்பானது. இதையொட்டி, நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

கடந்த 1998-ம் ஆண்டு, நான் இமாசலபிரதேசத்தில் பா.ஜனதா சார்பில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். மே மாதத்தில் மாலை நேரத்தில் ஒரு ஊருக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது, தேநீர் அருந்துவதற்காக, வழியில் ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்தினேன்.

அந்த தேநீர் கடைக்காரர், தேநீர் குடிப்பதற்கு முன்பு, லட்டு சாப்பிடுங்கள் என்று லட்டு கொடுத்தார். அதற்கு நான், யாருக்காவது திருமணமா? என்று கேட்டேன்.

அதற்கு அவர், உங்களுக்கு தெரியாதா? பிரதமர் வாஜ்பாய், இந்தியா அணுகுண்டு வெடித்த செய்தியை வானொலியில் அறிவித்தார், அதைக் கேட்டுத்தான் மகிழ்ச்சியில் லட்டு கொடுக்கிறேன் என்றார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மலைப்பாங்கான பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் ஒருவர் எப்படி தனது வேலையையும் செய்து கொண்டு, வானொலி மூலம் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார் என்று எண்ணி வியந்தேன். வானொலியின் சக்தியை உணர்ந்து, நான் பிரதம ஊழியன் (பிரதமர்) ஆனவுடன், இந்த நிகழ்ச்சியை தொடங்கினேன். இதில், அரசியல் இருக்கக்கூடாது என்று முதலிலேயே முடிவு செய்தேன். அதன்படி, என்னை பற்றியோ, என் அரசைப் பற்றியோ புகழாரங்கள் இருந்தது இல்லை. இந்நிகழ்ச்சி, மக்களைப் பற்றியது, அரசியலை பற்றியது அல்ல. இந்த எனது தீர்மானத்துக்கு நான் உண்மையாக இருப்பதற்கான வலிமை, உங்களிடம் இருந்தே எனக்கு கிடைத்துள்ளது.

நமது சமூகத்தில் நேர்மறை உணர்வை உருவாக்கி வலுப்படுத்தி இருப்பதே இந்த நிகழ்ச்சியின் மாபெரும் சாதனை என்று பெரும்பாலானோர் கருதுகிறார்கள். நேர்மறை இந்தியா என்ற மக்கள் புரட்சியை இது உருவாக்கி உள்ளது.

மக்கள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் கூறும் யோசனைகள், எனது மனதுக்கு நெருக்கமானவை. அவர்களின் பங்கேற்புக்கு நன்றி. மன் கி பாத் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் ஊடகங்களுக்கும் நன்றி.

டிசம்பர் 6-ந் தேதி, அம்பேத்கர் நினைவு தினம். இதையொட்டி, சாமானியர்கள் சார்பில் அவருக்கு தலை வணங்குகிறேன்.

இந்தியா தொன்மையான தேசம். பண்பாடும், பராக்கிரமமும் நிறைந்த நாடு. தலைவர்கள் வரலாம், போகலாம். மோடி வரலாம், போகலாம். ஆனால், இந்த நாடும், பண்பாடும் நிரந்தரமானவை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்