புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தொடக்க நாளில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து, மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் கடந்த 2 மற்றும் 3 ஆகிய நாட்களிலும், நேற்றும் நடந்தது. எனினும், கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், தேர்தல் தொடர்பாக நடந்து வரும் எஸ்.ஐ.ஆர். பணிகள் மற்றும் பல்கலைக்கழக மானிய குழு சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இதனால், அவை அடிக்கடி ஒத்தி வைக்கப்படும் சூழல் எழுந்தது. இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் 8 பேர் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவையிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.
இந்நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணியளவில் பதிலளித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மற்றும் இடையூறுகளால், அவை 5-ந்தேதி வரைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதுபற்றி பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி கூறும்போது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல பெண் எம்.பி.க்கள், அவையின் மத்திய பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பிரதமர் நாற்காலியை நோக்கி திரண்டு சென்றனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
அவர்களை இருக்கைக்கு திரும்பும்படி, மூத்த மந்திரிகள் பலர் தொடர்ந்து கேட்டு கொண்டனர். ஆனால், அதனை அவர்கள் கேட்கவில்லை என்றார். நிலைமை கட்டுப்பாட்டை மீறி சென்றது. இதனால் பிரதமர் மோடியால் அவைக்குள் வர முடியவில்லை என கூறினார்.