அமெரிக்காவில் இருந்து வெளியாகும் உலகப்புகழ் பெற்ற டைம் பத்திரிக்கை மே 20-ம் தேதியிட்ட டைம் இதழின் அட்டைப் படத்தில் பிரதமர் மோடி காவித் துண்டுடன் இருக்கும் மிகவும் ஒரு அழுத்தமான ஓவியம் இடம் பெற்றுள்ளது. அட்டைப் படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் தலைப்பு இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவின் பிரித்தாளும் தலைவர் என வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் ஐந்து ஆண்டுகளும் மோடியின் ஆட்சியை சகித்துக் கொள்ளுமா? என்று துணை தலைப்பையும் வைத்துள்ளது.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் மதசார்பற்ற கொள்கை; இந்தியாவில் இணக்கமான சமூகத்தை உருவாக்கியதையும்; இந்து - இஸ்லாமிய மதத்தினருக்கு இடையே இருந்த சகோதரத்துவத்தை மோடியின் கொள்கைகள் தரைமட்டமாக்கியதையும் ஒப்பிட்டுள்ளது. இந்தியாவின் பிரித்தாளும் தலைவர் என்ற கட்டுரையை இந்திய பத்திரிகையாளர் தவ்லீன் சிங்கின் மகன் ஆதிஷ் தசீர் எழுதி உள்ளார்.
நரேந்திர மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், பெண்களுக்கான பிரச்சினைகள் மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் பிரதமர் மோடியின் சாதனைகள் மற்றும், குண்டுவெடிப்பில் கைதான சாத்வி பிரக்யாவை வேட்பாளராக நிறுத்தியது என பல்வேறு காரணிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது தலைப்பாக மோடி, ஒரு சீர்திருத்தவாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில், இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு நம்பிக்கை தருபவர் மோடிதான் என்றும், பரம்பரை கொள்கையை தவிர, காங்கிரசிடம் எதுவுமே இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே டைம் பத்திரிகை தலைப்பை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, பிரித்தாளுவதுதான் மோடியின் கொள்கையாகும். காங்கிரஸ், முதலில் பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவை விட்டு விரட்டியது. அதுபோல், மோடியையும் விரட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2015-ம் ஆண்டு பிரதமர் மோடியின் புகைப்படம் அடங்கிய டைம் இதழ் வெளியாகியது. அதில் பிரதமர் மோடியின் பிரத்யேக பேட்டி இடம்பெற்று இருந்தது. பிரதமர் மோடியின் புகைப்படம் டைம் இதழின் சர்வதேச பதிப்பில் வெளியானது அதுவே முதல்முறையாகும். மோடி ஏன் முக்கியமானவர்? என்ற தலைப்புடன் வெளியிட்டது. இந்தியா உலகின் சக்தியாக உயரவேண்டியது உள்ளது. ஒருவருடம் ஆட்சி செய்துள்ள பிரதமர் மோடியால் அதனை வழங்கமுடியுமா? என்ற கேள்வியுடன் பிரதமர் மோடியின் பேட்டி வெளியாகியது.
இப்போது அதே பிரதமர் மோடியை விமர்சனம் செய்து கட்டுரை வெளியிட்டுள்ளது. இப்போதய இதழில், இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் வேளையில் மோடி வெறும் தோல்வி அடைந்த அரசியல்வாதியாக, மற்றொரு வாய்ப்பு கேட்டு தேர்தலை சந்திக்கிறார் என விமர்சனம் செய்யும் கட்டுரையை வெளியிட்டுள்ளது.