ஜோத்பூர்,
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கால்நடை பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், கைதான 4 பேரையும் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த ஐகோர்ட்டு புதிய கட்டிட திறப்பு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேயும் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
நாட்டில் சமீபத்தில் நடந்துள்ள சம்பவங்கள் ஒரு புதிய விவாதத்தை வீரியத்துடன் தூண்டி விட்டுள்ளன. குற்றவியல் நீதி அமைப்பு தனது நிலையையும், ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு எடுத்துக்கொள்ளும் நேர அணுகுமுறையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
நீதி என்பது உடனடியாக கிடைக்கக்கூடிய ஒன்றல்ல. நீதி எப்போதுமே பழிவாங்கும் போக்காக இருக்கக்கூடாது. நீதி என்பது பழிவாங்கக்கூடிய போக்காக மாறிவிட்டால், அது அதன் தன்மையை இழந்துவிடும். நீதித்துறையில் சுய திருத்தங்களை மேற்கொள்வதற்கான தேவை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசுகையில் கூறியதாவது:-
கற்பழிப்பு வழக்குகளை பொறுத்தமட்டில், அவற்றுக்கு விரைவாக நீதி வழங்குவதை கண்காணிக்க ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று நான் தலைமை நீதிபதியையும், பிற நீதிபதிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.
இதன் மூலம் சட்டத்தின் ஆட்சி நிர்வகிக்கப்படுகிற ஒரு பெருமைமிக்க நாடாக இந்தியாவின் அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும்.
நமது நாட்டின் பெண்கள் மிகுந்த வேதனைக்கும், துயரத்துக்கும் ஆளாகி இருக்கிறார்கள். அவர்கள் நீதிக்காக அழுகிறார்கள்.
கொடிய குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக 704 விரைவு கோர்ட்டுகளை அமைத்திருக்கிறோம். போக்சோ மற்றும் கற்பழிப்பு வழக்குகளை விசாரிப்பதற்காக 1,123 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
பெண்கள் மீதான வன்முறை குற்றங்கள் தொடர்பான சட்டத்தில், மரண தண்டனை மற்றும் பிற கடுமையான தண்டனையை கொண்டு வந்து இருக்கிறோம். வழக்கு விசாரணையையும் 2 மாத காலத்திற்குள் முடிக்க செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.