செய்திகள்

கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: தலைமறைவான பெண்முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் - ஐகோர்ட்டில் இன்று விசாரணை

கேரள அரசை உலுக்கி வரும் தங்கம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் பெண், முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஐகோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

கொச்சி,

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த கடத்தலின் பின்னணியில் மிகப்பெரும் புள்ளிகள் இருப்பது விசாரணையில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளியின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் இந்தக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

தலைமறைவாக இருக்கும் அவரையும், அவரது நண்பரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ள நிலையில், ஸ்வப்னா சுரேஷ் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்து உள்ளார். ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ள அந்த மனுவில் அவர், தனக்கும், தங்கம் கடத்தல் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை எனவும், தனக்கு எந்த குற்ற பின்னணியும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து தங்கத்தை வெளியே கொண்டு வர முடியாததால், ஐக்கிய அரபு அமீரக தூதரக அதிகாரியான ரஷித் காமிஸ் தன்னை தொடர்பு கொண்டதாகவும், அதன் பேரில்தான் சுங்க அதிகாரிகளை தான் தொடர்பு கொண்டதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) ஐகோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.

அதேநேரம் தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஸ்வப்னா சுரேசை கைது செய்வதற்கு மத்திய விசாரணை அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக கேரள காவல்துறையின் உதவியையும் அவர்கள் நாடியுள்ளனர்.

முன்னதாக இந்த கடத்தல் விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன் மீதும் குற்றச்சாட்டுகள் கிளம்பியது. எனவே அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனால் இந்த கடத்தல் சம்பவத்தில் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசுக்கும் பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளன.

இதன்மூலம் தங்கம் கடத்தல் விவகாரம் கேரள அரசை உலுக்கி உள்ளது. அதேநேரம் இந்த கடத்தல் விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கிடையே தங்கம் கடத்தல் விவகாரத்தில் பினராயி விஜயன் மீது கேரள பா.ஜனதா தலைவர் சுரேந்திரன் மீண்டும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், திருவனந்தபுரம் விமான நிலைய குடோனை நிர்வகிக்கும் கேரள அரசு அதிகாரிகள், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை 48 மணி நேரத்துக்குப்பின்னும் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு வழங்கவில்லை. இந்த விசாரணையில் மாநில அரசு அதிகாரிகள் ஒத்துழைத்திருந்தால் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் தப்பியிருக்கமாட்டார் என்று கூறினார்.

இந்த விவகாரத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதிய பினராயி விஜயன், அதில் விரிவான விசாரணைக்கு பதிலாக, சி.பி.ஐ. விசாரணைதான் கேட்டிருக்க வேண்டும் என்றும் சுரேந்திரன் தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்