சென்னை,
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு, வெளியகரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 26). பி.எஸ்சி. பட்டதாரி. இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். மணிகண்டனின் தந்தை பெயர் கண்ணன். தாயார் பெயர் ராதா. இவருக்கு 2 மூத்த சகோதரிகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மணிகண்டன் திருமணம் ஆகாதவர்.
கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு போலீஸ் துறையில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்கு சேர்ந்தார். பயிற்சி முடிந்த பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம், ஆவடி வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையில் 2-ம் நிலை போலீசாக பணியாற்றி வந்தார். கடந்த 2 மாதமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு மணிகண்டன் தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடினார். பின்னர் 5 மணிக்கு மீண்டும் ஆயுதப்படை தலைமை அலுவலகத்துக்கு பணிக்கு சென்றார்.
இந்தநிலையில் ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்ட அதிர்ச்சியில், அங்கிருந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மணிகண்டன், எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதும், துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு வலது நெற்றியில் இருந்து இடது காது வழியாக தலையை துளைத்து கொண்டும் வெளியே வந்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும், கீழ்ப்பாக்கம் போலீசாருக்கும், மணிகண்டனின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்து இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் ஜெகதீஷ்வரன் மற்றும் கீழ்ப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன், மணிகண்டனின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவலை தொடர்ந்து மணிகண்டனின் பெற்றோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழுத வண்ணம் வந்தனர். அவர்களுக்கு துணை கமிஷனர் ராஜேந்திரன் ஆறுதல் கூறினார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் டாக்டர் செல்வகுமார் தலைமையில் மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
மதியம் 1 மணிக்கு தொடங்கி, 2.20 மணி வரை பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் மணிகண்டனின் தந்தை கண்ணனிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்போது ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி. ஷகில் அக்தர், ஐ.ஜி. தமிழ்சந்திரன், டி.ஐ.ஜி. ஜெயகவுரி, சூப்பிரண்டு சம்பத்குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து மணிகண்டனின் உடல் அவரது சொந்த ஊரான பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
மணிகண்டனின் தற்கொலை தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மணிகண்டன் தனது கல்லூரி காலத்தில் தன்னுடன் படித்த சக மாணவியை காதலித்ததாகவும், அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்ததாகவும் தெரியவந்தது.
மேலும் மணிகண்டன் கடந்த சில நாட்களாக காதல் தோல்வியால் மிகுந்த மன வேதனையில் இருந்ததும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் அன்று மணிகண்டன் தற்கொலை செய்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் போலீஸ்காரர் ஒருவரும், ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்பு படையில் போலீசார் ஒருவரும், அயனாவரம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் ஆயுதப்படை தலைமையகத்தில் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.