சென்னை,
கொரோனாவை போன்று, டெங்கு காய்ச்சலின் தாக்கமும் தமிழகத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்கள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறைக்கு பல்வேறு அறிவுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் கொரோனாவுடன், டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக அரசுக்கு தெரியப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களும், டெங்கு தடுப்பு பணிகளிலும் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டெங்குவுக்கு நிலவேம்பு குடிநீர், இதுவரை நல்ல பலனை அளித்துள்ளது. அதேபோல் தட்டணுக்களும் கையிருப்பில் உள்ளன. தேவையான மருந்துகளும் கையிருப்பில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.