புதுடெல்லி,
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்திருத்த மசோதா குறித்த பேச்சுவார்த்தை பாராளுமன்றத்தில் நேற்று நடந்தது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சடப்டி ராய், உன்னாவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் குறித்து கேள்வி எழுப்பினார்.
அவர் கூறுகையில், ஒரு தாயாக, அங்கு என்ன நடந்தது? இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பதை நான் அறிய விரும்புகிறேன். அந்த பெண் செய்த தவறு என்ன? ஒரு சக்தி வாய்ந்த அரசியல்வாதிக்கு எதிராக போராடி அவருக்கெதிரான உண்மையை வெளிக்கொண்டு வந்தது தான் அந்த பெண் செய்த தவறா? என்றார்.
இதற்கு பதிலளித்த பாஜக எம்.பி. ஸ்மிரிதி இரானி 2018 ஆம் ஆண்டின் குற்றவியல் சட்டத்திருத்த மசோதாவாக இருந்தாலும் சரி இன்று கொண்டு வரப்படும் சட்டத்திருத்தமாக இருந்தாலும் சரி, கொடிய தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் செய்த தவறு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க நமது நீதிபதிகளுக்கு பாராளுமன்றம் முழு சுதந்திரத்தை வழங்கியுள்ளது. மேலும் ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தவறு செய்தால் அவர்களுக்கு தண்டனை கிடையாது என்று மோடி அரசு எந்த ஒரு இடத்திலும் சொன்னது கிடையாது என்றார்.