செய்திகள்

துறையூர் அருகே பரிதாபம்: குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலி

துறையூர் அருகே குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சைமலையில் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம். இவருடைய மகள் சிந்துஜா(வயது 12). அதே ஊரை சேர்ந்த விவசாயி தங்கராஜின் மகள் பிரியா(12). இவர்கள் இருவரும் அதே ஊரில் உள்ள ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த 3-ம் பருவத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் நேற்று கல்வி ஆண்டின் இறுதி நாள் என்பதால், பள்ளியில் உள்ள மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் முகத்தில் வண்ணப் பொடிகளை பூசி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

அவர்களுடன் சேர்ந்து சிந்துஜாவும், பிரியாவும்வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ந்தனர். பின்னர் மாணவிகள் அனைவரும் தங்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது, சிந்துஜா, பிரியா ஆகியோரின் முகம் மற்றும் உடலில் வண்ணப் பொடிகள் இருந்துள்ளது. இதனால் புதூரில் உள்ள குளத்துக்கு சென்று முகத்தை கழுவிச்செல்ல அவர்கள் திட்டமிட்டனர். அதன்படி, புதூருக்கு வந்ததும் அவர்கள் இருவரும் குளத்தில் இறங்கி முகத்தை கழுவிக்கொண்டு இருந்தனர். அப்போது, அவர்களின் கால்கள் சேற்றில் சிக்கி கொண்டன. இதனால் அவர்களால் வெளியே வரமுடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பார்த்த அந்த வழியாகவந்தவர்கள் 2 மாணவிகளின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர்.

அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவிகளின் உடலை மீட்டனர். அப்போது மாணவிகளின் உடலை தூக்கிக்கொண்டு அவர்களின் பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவிகள் 2 பேர் குளத்தில் மூழ்கி இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்