திருத்தணி,
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முபாரக் அன்சாரி (வயது 28). இவரது மனைவியான ரேஷ்மா (25) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தம்பதிகள் இருவரும் குடும்பத்துடன் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் முபாரக் அன்சாரி அவரது மனைவி ரேஷ்மா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் அரசு அனுமதி பெற்று சிறப்பு விரைவு ரெயில் மூலம் கேரளாவில் இருந்து பீகாருக்கு புறப்பட்டனர்.
இதையடுத்து, அந்த சிறப்பு ரெயில் திருத்தணி ரெயில் நிலையம் அருகே வந்தபோது, அதில் பயணம் செய்து கொண்டிருந்த ரேஷ்மாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கர்ப்பிணிக்கு ரெயிலிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே அவரது கணவர் ரெயில் சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார்.
இதைதொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து விவரம் அறிந்து, குழந்தையை பெற்றெடுத்த தாய் உள்பட குடும்பத்தினரை ஆம்புலன்சு மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு வைத்தனர். அதன் பின்னர், ரெயில் புறப்பட்டு சென்றது.