செய்திகள்

திண்டிவனம் அருகே, லாரி மீது கார் மோதல்- 2 பெண்கள் பலி

திண்டிவனம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியானார்கள்.

திண்டிவனம்,

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருள்முருகன்(வயது 52). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது மனைவி பத்மாவதியை(45) சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முழு உடல்பரிசோதனை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு அருள்முருகன் தனது மனைவி பத்மாவதி, உறவினர்களான அதே ஊரை சேர்ந்த துரைசாமி மகன் கிரிவரதன்(30), துரைசாமி மனைவி பத்மாவதி(53) ஆகியோருடன் ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை கிரிவரதன் ஓட்டினார். அந்த கார் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் கூட்டேரிப்பட்டு தனியார் பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பிய லாரி ஒன்று, தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மார்க்கமாக திரும்பியது. அப்போது அருள்முருகன் உள்ளிட்டோர் வந்த கார் எதிர்பாராதவிதமாக அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.இதைபார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மயிலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் விபத்தில் சிக்கிய அருள்முருகன் உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அருள்முருகன் மனைவி பத்மாவதி, துரைசாமி மனைவி பத்மாவதி ஆகியோரை பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் பலத்த காயமடைந்த கிரிதரன், அருள்முருகன் ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே போலீசார் மற்றும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஊழியர்கள் விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்