செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் வடகர்நாடகம் ஹெலிகாப்டரில் சென்று எடியூரப்பா ஆய்வு பிரதமரை சந்தித்து நிதி உதவி கோரப்படும் என பேட்டி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடகர்நாடகத்தில் முதல்- மந்திரி எடியூரப்பா நேற்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் பேட்டி அளிக்கையில், பிரதமரை சந்தித்து நிதி உதவி கோரப்படும் என்று தெரிவித்தார்.

பெங்களூரு,

வட கர்நாடகத்தில் அதிகளவில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் கனமழை கொட்டி வருவதால், கொய்னா அணையில் இருந்து சுமார் 3 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள நீர் பாய்ந்தோடுவதால், விஜயாப்புரா, ராய்ச்சூர், யாதகிரி, பெலகாவி, பாகல்கோட்டை உள்ளிட்ட வடகர்நாடக பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அருகில் உள்ள கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

மேலும் முக்கிய சாலைகளில் பாலங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் குழுவினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள், தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் முதல்- மந்திரி எடியூரப்பா நேற்று விஜயாப்புரா, ராய்ச்சூர், பாகல்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஹெலிகாப்டரில் பறந்து சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் விஜயாப்புராவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மராட்டிய மாநிலத்தில் அதிக மழை பெய்வதால், கொய்னா அணையில் இருந்து அதிக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விஜயாப்புரா, ராய்ச்சூர், பெலகாவி, பாகல்கோட்டை, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த பாதிக்கப்பட்ட பகுதிகளை நான் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தேன். அதிகாரிகளிடம் முழு விவரங்களை கேட்டு பெற்றுள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை செய்து தரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த பகுதிகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து இந்த பகுதி எம்.எல்.ஏ.க்கள் சில ஆலோசனைகளை வழங்கினர்.

இன்னும் 15 நாட்களில் பெங்களூருவில், இந்த வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளேன். அதில் மக்களுக்கு செய்யும் பணிகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வேறு இடத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் மக்களுக்கு உதவ தேசிய பேரிடர் குழு மற்றும் மாநில பேரிடர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அவர்களிடம் மீட்பு பணிகளுக்கு தேவையான ரப்பர் படகு உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.

இந்த பகுதிகளில் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் அதிகமாக உள்ளதால், சில பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் அந்த சாலைகள் மூடப்பட்டு, வாகனங்கள் வேறு சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர். அவர்களின் இந்த சிறப்பான பணியை நான் பாராட்டுகிறேன்.

நான் நாளை (அதாவது இன்று) பிரதமர் மற்றும் மத்திய நீர்ப்பாசனத் துறை மந்திரியை நேரில் சந்தித்து பேச உள்ளேன். அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிதி உதவி வழங்குமாறு கேட்க உள்ளேன். மேலும் வெள்ள பாதிப்பு குறித்து மராட்டியம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். நான் நேர்மையான முறையில் பணியாற்றி இந்த பகுதி மக்களின் கஷ்டங்களை போக்குவேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிதி பற்றாக்குறை இல்லை. கலெக்டர்களின் வங்கி கணக்கில் போதுமான அளவு நிதி உள்ளது. தேவைப்பட்டால், 24 மணி நேரத்தில் நிதியை ஒதுக்க தயாராக இருக்கிறேன். மழை நின்ற பிறகு சேதம் அடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். கிருஷ்ணா ஆற்று படுகையில் உள்ள 51 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த குடும்பங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை கிடைத்த தகவல்படி வெள்ளத்தால் 362 ஏக்கரில் விளை பயிர்கள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கு தேவையான இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பேன். 2009-ம் ஆண்டு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, இதே கிருஷ்ணா ஆற்றுப்படுகையில் அதிக மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டது.

அப்போது தாழ்வான பகுதியில் இருந்த 52 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதையடுத்து அந்த கிராமங்களை மேடான பகுதியில் இடம் மாற்றி அமைத்து கொடுத்தோம். அங்கு 11 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. இன்னும் 1,000 வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். மக்கள் விரும்பினால் ஆற்றுப்படுகையில் பாதிப்புக்கு உள்ளாகும் கிராமங்கள் வேறு இடத்தில் மாற்றி அமைக்க அரசு தயாராக உள்ளது. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு