பூந்தமல்லி,
பூந்தமல்லி, நசரத்பேட்டை, போரூர் ஆகிய பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து மோட்டார்சைக்கிளில் செல்லும் மர்மநபர்கள் அடிக்கடி சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்தார்கள். இது குறித்து நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
மேலும் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும், அதில் உள்ள மர்மநபர்களின் மோட்டார்சைக்கிள் பதிவு எண்களை வைத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக சூளைமேட்டைச் சேர்ந்த ராகேஷ் என்ற ராகேஷ் குமார் (வயது 20), நுங்கம்பாக்கத்தை சேர்ந்த குமார் என்ற ஆட்டோ குமார்(20), முகம்மது ஆசிக்(21), பெரம்பூரைச் சேர்ந்த தட்சனா(22), கோடம்பாக்கத்தை சேர்ந்த முகம்மது அஜீம்(21) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு நசரத்பேட்டை, பூந்தமல்லி, போரூர் ஆகிய பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து நகைகளை பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர். கைதான 5 பேரிடம் இருந்தும் 20 பவுன் நகைகள் மற்றும் இரண்டு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்களுக்கு கூட்டாளிகள் வேறு யாராவது உள்ளார்களா? வேறு எங்கும் இதுபோல் இவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.