சென்னை,
தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் காலஅட்டவணையை ஏற்கனவே வெளியிட்டது.
அதன்படி, இன்று தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 13-ந்தேதி கடைசி நாளாகும்.
வேட்பு மனுக்களை, சொத்துப்பட்டியல் உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச்செயலகத்தில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (விடுமுறை நாளான 8-ந்தேதி தவிர) தாக்கல் செய்யலாம்.
ஒரு வேட்பாளரை 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வேண்டும். ரூ.10 ஆயிரம் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ரூ.5 ஆயிரம் செலுத்தினால் போதும்.
வேட்பு மனுக்கள் பரிசீலனை வருகிற 16-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற 18-ந் தேதி கடைசி நாளாகும். போட்டிக்களத்தில் 6 வேட்பாளர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே 26-ந் தேதி தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டமன்ற குழுக்கள் அறையில் வாக்குப்பதிவு நடத்தப்படும்.
காலியிடத்துக்கு சமமாக 6 வேட்பாளர்கள் மட்டுமே இறுதிக்களத்தில் இருந்தால் 18-ந் தேதியன்றே தேர்தல் முடிவு வெளியிடப்படும். 6 பேருக்கு மேல் இருந்தால், வாக்குப்பதிவு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு நடந்த 26-ந்தேதி அன்றே மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நடவடிக்கைகள் வருகிற 30-ந் தேதி முடியும்.
இந்த தேர்தலுக்காக தமிழ்நாடு சட்டசபை செயலாளரை (கி.சீனிவாசன்) தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், கூடுதல் செயலாளரை (பா.சுப்பிரமணியம்) உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் இந்திய தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.
வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்புமனுக்கள், சொத்துப்பட்டியல் ஆகிய விவரங்களை அனைவரும் காணும்படி, சட்டசபையின் விளம்பரப் பலகை மற்றும் இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யப்படும்.