சென்னை,
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. முதல்-அமைச்சர் ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய்கள் அமைப்பதற்கு ரூ.75 கோடியே 28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார்.
இதன் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு மற்றும் மேலாண்மை பணிகளுக்காக கூடுதலாக ரூ.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகளை மேம்படுத்தவும், மருத்துவமனை கட்டிடங்கள் மற்றும் மின்சாரம் சார்ந்த பணிகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும். மருத்துவக்கல்வி இயக்குனரகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலமாக உயர்வெற்றிட வெளியேற்ற அமைப்பை நிறுவிடவும் ஆக்சிஜன் தொட்டிகளை அமைப்பதற்கும் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.