சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நலன் கருதியும், அங்கு மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற நோக்கத்திலும், உலக அளவில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற வகையிலும், அரசியலமைப்பு சாசனப் பிரிவுகள் 35ஏ மற்றும் பிரிவு 370 ஆகியவற்றை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்து அறிவித்திருப்பது, ஒரு துணிச்சலான, அவசியமான முடிவு என்றவகையில் இதை வரவேற்கிறேன்.
இத்தகைய அறிவிப்பின் மூலம், பிரிக்கப்பட்ட இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் தீவிரவாத, பயங்கரவாத தாக்குதல்கள் இனியும் நிகழாதிருப்பதையும், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறாமல் இருப்பதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜம்மு- காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டிருந்த தனி அதிகாரம் விலக்கப்பட்டு இருப்பது நல்ல முடிவு. இதனால் பயங்கரவாதத்துக்கு முடிவு வரும். ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள். அதே நேரத்தில் மக்களுக்கான பாதுகாப்பையும், பயங்கரவாதிகளின் நடவடிக்கையால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதையும், தேவைக்கு அதிகமான அதிகாரத்தையும், அழுத்தத்தையும், பாதுகாப்பு துறையினர் செய்யாமலும் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. அதை மத்திய அரசு செய்யும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.