திண்டுக்கல்,
திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டி அருகே உள்ள மைக்கேல்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் விக்னேஷ் (வயது 27). கூலித்தொழிலாளி. இவருக்கும், 21 வயது இளம்பெண் ஒருவருக் கும் பழக்கம் ஏற்பட்டது.
அந்த பெண்ணை அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்த விக்னேஷ் ஒரு கட்டத்தில் திருமண ஆசை வார்த்தை கூறி அவரை கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அந்த பெண் கேட்டபோதெல்லாம் விக்னேஷ் ஏதாவது காரணங்களை கூறி தட்டிக் கழித்து வந்துள்ளார்.
பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு விக்னேசின் வீட்டுக்கு சென்று அந்த பெண் நியாயம் கேட்டுள்ளார். அப்போது விக்னேசின் உறவினரான பாப்பாத்தி (49) என்பவர் அந்த பெண்ணை அவதூறாக பேசியுள்ளார். அதையடுத்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விக்னேஷ், பாப்பாத்தி ஆகியோர் மீது இளம்பெண் புகார் அளித்தார்.
அப்போது அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த முத்துலட்சுமி இளம்பெண்ணின் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், பாப்பாத்தி ஆகியோரை கைது செய்தார். மேலும் இருவர் மீதும் திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி புருஷோத்தமன் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தார்.
அதில் திருமண ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கற்பழித்த விக்னேசுக்கு 11 ஆண்டு சிறை தண்டனை, ரூ.6 ஆயிரம் அபராதமும், நியாயம் கேட்டு வந்த பெண்ணை அவதூறாக பேசிய பாப்பாத்திக்கு ரூ.1,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து பாப்பாத்தி அபராத தொகையை செலுத்தியதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, ஏட்டு ஜோதி ஆகியோர் விக்னேசை மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.