செய்திகள்

கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம்: வாக்கு சேகரிக்க சென்ற எம்.பி., எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்ததை கண்டித்து, அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.வை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

குஜிலியம்பாறை,

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் லந்தக்கோட்டை ஊராட்சியில் 17 கிராமங்கள் உள்ளன. இங்கு 1800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் லந்தக்கோட்டையில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் கடும் வறட்சியின் காரணமாக ஆழ்துளை கிணறு தண்ணீரின்றி வறண்டது.

இதனால் ஊராட்சியில் உள்ள முத்தக்காபட்டி, கன்னிமார்பாளையம், நெசவாளர்காலனி, லந்தக்கோட்டை, சீரங்கம்பட்டி, வைரம்பட்டி, முத்தழகுபட்டி, செட்டியூர், மாணிக்காபுரம், சாலம்பட்டி, கரும்புளிபட்டி மற்றும் ஆதிதிராவிடர் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரிக்கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் அந்த தண்ணீரில் கடந்த 3 மாதங்களாக கழிவுநீர் கலந்து வந்துள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் செய்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கிராம மக்கள், 100-க்கும் மேற்பட்டோர் லந்தக்கோட்டையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கரூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், துணை சபாநாயகருமான தம்பிதுரை எம்.பி., பரமசிவம் எம்.எல்.ஏ. ஆகியோர் லந்தக்கோட்டை ஊராட்சியில் வாக்கு சேகரிக்க சென்றனர். அப்போது கிராம மக்கள் அவர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து புகார் தெரிவித்தனர். மேலும் கழிவுநீர் கலந்த குடிநீரையும் பாட்டிலில் பிடித்து காண்பித்தனர். இதையடுத்து 2 நாட்களில் குடிநீர் பிரச்சினையை சரிசெய்வதாக அவர்கள் கூறினார். அப்போது, இவ்வளவு நாள் தொகுதி பக்கம் வராத நீங்கள், எப்படி 2 நாட்களில் பிரச்சினையை சரிசெய்வீர்கள், நாங்கள் ஓட்டு போட மாட்டோம் என கிராம மக்கள் கூச்சலிட்டனர். இதன் காரணமாக வாக்கு சேகரிக்க முடியாமல் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்