சிறப்புக் கட்டுரைகள்

பயம் நிறைந்த வாழ்க்கை பரிதவிக்கும் குடும்பங்கள் : நிம்மதியடைய என்ன வழி?

பயம் நிறைந்த வாழ்க்கை மக்களுக்கு பழக்கமாகிக்கொண்டிருக்கிறது. எதற்கெடுத்தாலும் பயம் கொள்கிறார்கள்.

தினத்தந்தி

கண்டதையும் நினைத்து காரணமில்லாமல் கவலைப்படுகிறார்கள். சாதாரண பிரச்சினைகளைகூட எதிர்கொள்ள முடியாமல் அதற்குரிய நிபுணர்களிடம் ஆலோசனை கேட்க ஓடுகிறார்கள். இதனால் உருவாகும் பதற்றமும், பரபரப்பும் அவர்களது மனநிலையில் பெரும் மாற்றங்களை உருவாக்கி, மன அழுத்தத்தை தோற்றுவிக்கிறது. அது அவர்களது அன்றாட வாழ்க்கையில் சிக்கலையும், பணியில் பாதிப்பையும், உறவில் நெருக்கடியையும் உருவாக்குகிறது. அத்தகைய பயம் தொடர்புடைய இரண்டு சம்பவங்கள்.

சம்பவம் ஒன்று:

அவருக்கு 40 வயது. இரண்டு குழந்தைகளின் தந்தை. மனைவி வீட்டிலே இருந்து குடும்பத்தை நிர்வகிக்கிறாள். இவர் மருத்துவமனை ஒன்றில் பரிசோதனைப் பிரிவில் பணியாற்றுகிறார். மனைவிக்கும், இவருக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகளால் வாக்குவாதம் தோன்றும். அன்றும் அப்படித்தான் காலையில் கடுமையான வாக்குவாதம். மனைவியை அவர் கண்டபடி திட்டிவிட்டு, கிளம்பி, அலுவலகத்திற்கு வந்துவிட்டார். ஆனால் வேலை ஓடவில்லை. மனது பலவாறாக குழம்பியது.

கணவரை பிடிக்காத ஒரு பெண், தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு முரண்பட்ட காதல் சிக்கலில் மாட்டிக்கொண்ட சம்பவம் ஒன்று அவரது நினைவுக்கு வர உடனே அவர் தனது மனைவியும் அவ்வாறு செய்துவிடுவாளோ! என பயந்தார். உடல் முழுக்க பயம் பரவியது. தலை சுற்றியது. மனைவியிடம் சண்டைபோட்டுவிட்டு காலை உணவு சாப்பிடாமல் வந்த தளர்ச்சியும் சேர்ந்துகொள்ள மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை உருவானது.

சம்பவம் இரண்டு:

அவர்கள் இளந்தம்பதியர். காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். மனைவி தைரியமானவள். எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடியவள். கணவர் அப்படியல்ல. தனிமை விரும்பி. அடுத்தவர்களிடம் அதிர்ந்துகூட பேசமாட்டார். அவருக்கு கோபமும் வராது. ஆனால் என்றாவது ஒருநாள் கோபம் வந்துவிட்டால் புத்தி பேதலித்தவர் போன்று தாறுமாறாக நடந்துகொள்வார்.

அன்று இருவரும் முக்கியமான குடும்ப விஷயம் ஒன்றை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, பேச்சு திசைமாறிப்போய் அவருக்கு ஆத்திரம் வந்துவிட்டது. உடனே எதுவும் சொல்லிக்கொள்ளாமல் கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. எட்டு மணி நேரம் செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துவைத்துவிட்டார்.

அவளது அலுவலக தோழி ஒருத்தியின் கணவர் இப்படித்தான் தனது மனைவியோடு சண்டையிட்டுக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி, காட்டுப்பகுதி ஒன்றுக்குள் சென்று தற்கொலை செய்துகொண்டார். அதுபோல் தன் கணவரும் நடந்துகொள்வாரோ என்று நினைத்து பதறிவிட்டாள். ஊர்க்காரர்கள், உறவுக்காரர்களுக்கெல்லாம் கணவர் காணாமல் போன தகவலை சொன்னாள். பெருங்குழப்பமே உருவாகிவிட்டது.

இந்த இரண்டு சம்பவங்களிலுமே எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. சில மணி நேர பதற்றமும், பரபரப்புமே ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்த நேரங்களில் இரு குடும்பத்தினரும் அனுபவித்த மனநெருக்கடி விவரிக்க முடியாதது. இரு சம்பவத்தில் தொடர்புடைய நால்வரும் என்னிடம் கவுன்சலிங்குக்கு வந்தவர்கள்.

இன்று மக்கள் எது எதற்கோ பயப்படுகிறார்கள். பயணம் செய்ய பயப்படுகிறார்கள். பணத்தை ஓரிடத்தில் இருந்து இனனொரு இடத்துக்கு கொண்டு செல்ல பயப்படுகிறார்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தையை யாரேனும் கடத்திச் சென்று விடுவார்களோ என்ற பயமும், கல்லூரிக்குச் செல்லும் மகள் யாரையேனும் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொள்வாளோ என்றும் பயப்படுகிறார்கள். குடும்பத்தில் நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும், முன்பு எங்கோ, யாருக்கோ நடந்த எதிர்மறையான சம்பவத்தோடு முடிச்சுப்போட்டு சிந்தித்து, அதுபோல் தன் வீட்டிலும் நடந்துவிடுமோ! என்று காரணமில்லாமல் கவலை கொள்கிறார்கள்.

வாழ்க்கையில் பயம் ஏற்படுவதற்கு மூளையில் பதிவாகியிருக்கும் எதிர்மறையான சம்பவங்களே பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன. நாம் கண்களையும், காதுகளையும் பயன்படுத்தி எப்போதும் ஏராளமான செய்திகளை பார்க்கவும், கேட்கவும் செய்கிறோம். பொதுவாக எதிர்மறையான செய்திகள் மீதுதான் எப்போதும் நம் கவனம் அதிகம் பதியும். நமக்கும் அப்படி நடந்துவிடக்கூடாதே, என்ற எண்ணத்திலும் நாம் அந்த சம்பவத்தில் இருந்து விழிப்புணர்வு பெற முடியும் என்ற நோக்கத்திலும் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அந்த எதிர்மறை சம்பவத்தை அப்படியே மனதில் பதியவைத்துவிடுகிறோம். பின்பு அந்த சம்பவத்தை நமக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களிடம் கூறி, இப்படி எல்லாம் நடக்கிறது. நாம் கவனமாக இருந்துக்கணும் என்றும் சொல்வோம்.

ஒரு எதிர்மறை செய்தியை பார்த்தாலோ, படித்தாலோ அதில் இருக்கும் தகவலை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்றவற்றை அப்படியே மறந்துவிடவேண்டும் என்ற அடிப்படை உண்மையை மறந்துவிட்டு, அந்த எதிர்மறை செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டால், அது அப்படியே நமது மூளையில் பதிவாகிவிடும். அப்படி பதிய இடம்கொடுத்துவிட்டால், நமது குடும்பத்தில் என்ன பிரச்சினை நடந்தாலும் உடனே அந்த சம்பவம் நினைவுக்கு வந்து அதுபோல் ஆகிவிடுமோ! என்ற கருத்தை பரப்பி பயத்தை உருவாக்கிவிடும். அந்த பயத்தால் விரும்பத்தகாத விளைவுகள் உருவாகும். விபரீதங்கள் கூட நடந்துவிடும். அப்படிப்பட்ட தேவையற்ற பயம்தான் இப்போது சமூகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இந்தவித பயங்கள் பெண்களைவிட ஆண்களிடம் அதிகம் இருக்கிறது.

இந்த மாதிரியான தேவையற்ற பயம் உங்களை வாட்டாமல் இருக்கவேண்டும் என்றால், எதிர்மறையான சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. அத்தகைய சம்பவங்களை கேட்பது, பார்ப்பது, பேசுவது, விவாதிப்பது போன்றவைகளை தவிர்க்கவேண்டும். அதே நேரத்தில் பாசிட்டிவ்வான செய்திகளை பற்றி திரும்பத் திரும்ப பேசி, விவாதித்து அவைகளை மூளையில் பதியவிட வேண்டும். இந்த இரண்டும் சரியாக நடைபெறவேண்டும் என்றால் முதலில் சராசரி மனிதர்கள் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையும், தைரியமும் நிறைந்தவர்களாக இருக்கவேண்டும். வாழ்க்கையில் ஒழுக்கமும், நம்பிக்கையும் கொண்டிருக்கவேண்டும். மனோசக்தியை மேம்படுத்தவேண்டும். அதற்கு தியானம் நன்றாக கைகொடுக்கும். கூடவே குடும்ப உறவுகளை சீர்படுத்தி சிறப்பாக வாழவும் வேண்டும்.

இன்று இயந்திரமயமான வாழ்க்கையைதான் எல்லோரும் வாழ்கிறார்கள். படிப்பு, வேலை, பணம் சம்பாதித்தல், வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ளுதல் என்று வேகவேகமாக ஓடுகிறார்கள். அவர்கள், ஐம்பது வயதை தொடும்போதுதான், வாழ்க்கையின் வெற்றி அவைகளில் இல்லை.. மகிழ்ச்சி என்பதில் இருக்கிறது என்பதை கண்டறிகிறார்கள். மகிழ்ச்சி என்பதை பதவியாலோ, பணத்தாலோ, செல்வாக்காலோ பெற முடியாது என்ற உண்மையும் அப்போதுதான் அவர்களுக்கு புரிகிறது.

அப்படியானால் மகிழ்ச்சியை எப்படி அனுபவிப்பது? எது மகிழ்ச்சி? ரொம்ப சிம்பிள். இரவில் படுத்து நன்றாக தூங்க முடிந்தால் அது மகிழ்ச்சி. மறுநாள் காலையில் விழித்து சூரியனை பார்க்க முடிந்தால் அது மகிழ்ச்சி. பசிக்கு ருசியாக சாப்பிட முடிந்தால் அது மகிழ்ச்சி. ஆரோக்கியமாக வாழ்ந்தால் அது மகிழ்ச்சி. அதற்கு மேல் வாழ்க்கையில் ஏற்படும் எல்லா கஷ்டங்களையும், அனுபவங்களாக எடுத்துக்கொள்ளத் தெரிந்தால் அதுவும் மகிழ்ச்சிதான்.

ஒருவருக்கு வியாபாரத்தில் திடீரென்று ஒருகோடி ரூபாய் நஷ்டம் வந்துவிட்டது. அதை அறிந்த மனைவி கவலையோடு கணவரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். அவரோ சிரித்தபடி வீட்டிற்கு வந்தார். ஏன் சிரித்துக்கொண்டே வருகிறீர்கள்? என்று மனைவி காரணம் கேட்டார். அதற்கு அவர் நான் ஒருகோடி ரூபாய் செலவு செய்து உயர்ந்த பாடம் ஒன்றை படித்து வந்திருக்கிறேன். அது இனிமேல் என்னை தோல்வியடைய விடாது. காலம் முழுக்க நான் லாபம் சம்பாதிக்கவும் உதவும் என்றார். இப்படி தோல்வியை பாடமாகவும், அனுபவமாகவும் எடுத்துக்கொள்ள முடிந்தால் அது மகிழ்ச்சி!

தம்பதிகள் அனைவருமே குடும்ப உறவுகளை சீராக வைத்துக்கொள்ளவேண்டும். மனம்விட்டுப்பேசி எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டும். ஒருவரை ஒருவர் நம்பவேண்டும். ஒழுக்கமாக வாழ வேண்டும். இவை எல்லாம் இருந்தால் கவலை இருக்காது. நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை இருந்தால் பயம் இருக்காது. வாழ்க்கை இனிக்கும்.

-விஜயலட்சுமி பந்தையன்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை