சிறப்புக் கட்டுரைகள்

நதிகள் பாதுகாப்பு தினம் இன்று: ஜீவநதிகளை முறையாக பராமரிக்கிறோமா?

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 14-ந் தேதி, நதிகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நதிகள்... மனித உயிர்கள் வாழ்வதற்கு மட்டுமின்றி, பசியாற்றும் பயிர்கள் வாழ்வதற்கும் இவையே ஜீவநாடி. மழையாய் பிறந்து, மலையில் தவழ்ந்து, நதியாய் ஓடி, உயிரினங்களில் தாகம் தணித்து, பயிர்களுக்கும் உயிர்கொடுத்து பல்கி பெருகச் செய்து, இறுதியில் கடலில் போய் கலப்பதே ஒரு நதியின் கதை.

அந்த நதிகளை முறையாக பராமரித்து பாதுகாத்தால்தான், அது தனது சேவையை காலாகாலமாக மக்களுக்கு செய்ய முடியும். ஆனால், நதிகளை நாம் பாதுகாத்து பராமரிக்கிறோமா? என்றால், அதுதான் இல்லை. வேதனையான உண்மையும் கூட.

எடுத்துக்காட்டாக, சென்னையின் மையப்பகுதியில் ஓடும் கூவம் நதியைக் கண்டால், இன்றைக்கு மூக்கைப்பிடித்துக் கொண்டு வேகமாக கடந்து செல்கிறோம். ஆனால், 1935-ம் ஆண்டு வரை கூவம் நதிதான் சென்னை மக்களின் தாகம் தீர்த்த ஜீவநதியாகத்தான் இருந்துள்ளது.

பிறகு, மக்கள் பெருக்கம், கழிநீர் செல்ல வழியில்லாமல் நதியிலேயே கழிவுநீரை கலந்தது போன்ற காரணத்தால், கழிவுநீர் கால்வாயாகவே கூவம் நதி மாறிப்போய்விட்டது. சுமார் 90 ஆண்டுகள் கடந்து போனாலும், இன்னும் நதியை மீட்க முடியவில்லை. சென்னையில் ஓடும் அடையாறு, பக்கிங்காம் கால்வாயின் நிலையும் அதுதான்.

இந்த நிலையில், நதிகளின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தவும், அதை பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 14-ந் தேதி, நதிகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், 2026-ம் ஆண்டிற்கான கருப்பொருள், "நதிகளைப் பாதுகாப்போம், மக்களைப் பாதுகாப்போம்" என்பதாகும்.

1997-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற அணைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் சர்வதேசக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 1998-ம் ஆண்டு முதல் நதிகள் பாதுகாப்பு தினம் சர்வதேச அளவில் அனுசரிக்கப்படுகிறது.

Also read:காட்டுயானம் அரிசி உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததா?

கழிவுநீர் கலப்பு, ஆக்கிரமிப்புகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் அழிவில் இருந்து நதிகளை மீட்பதே இதன் முதன்மை நோக்கமாகும். நதிகள் என்பவை வெறும் நீர்நிலைகள் மட்டுமல்ல, அவை பூமியின் ரத்த நாளங்கள் என்பதை உணர்ந்து, அவற்றின் இயற்கையான ஓட்டத்தை உறுதி செய்ய இந்த நாளில் உறுதிமொழி ஏற்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.