சிறப்புக் கட்டுரைகள்

சரும அழகு ‘இரட்டை கன்னம்’: பாதிப்பும்.. தீர்வும்..!

உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பை கரைப்பதற்கு முயற்சி செய்யும் பலர், முகத்தில் படிந்திருக்கும் கொழுப்பை நீக்குவதற்கு முயற்சிப்பதில்லை. கன்னம் மற்றும் தாடைக்கு அருகில் கொழுப்பு அதிகமாக சேரும்போது ‘இரட்டை கன்னம்’ பிரச்சினை உண்டாகும். தாடையின் அடியில் மற்றொரு அடுக்கு தோன்றி முகதோற்றத்தையே மாற்றியமைத்துவிடும். முக அழகை கெடுத்துவிடவும் கூடும்.

தினத்தந்தி

உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வது, மோசமான உடல் தோரணை, வயது அதிகரிப்பு, மரபணு அல்லது முக அமைப்பு காரணமாக இரட்டை கன்னம் பிரச்சினை உண்டாகலாம். ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்களையும், எளிய பயிற்சிகளையும் செய்வதன் மூலம் கன்னத்தை சுற்றி சேரும் அதிகப்படியான கொழுப்பை குறைத்து வசீகரமான முக அழகை தக்க வைத்துக்கொள்ளலாம்.

அதற்கான பயிற்சி முறைகள்:

மீன் போன்ற முகம்: கன்னத்தின் இரு பகுதிகளையும் உள் நோக்கி குவித்துக்கொள்ள வேண்டும். அதுபோல் உதட்டையும் குவித்து மீன் போன்று வைத்துக்கொள்ள வேண்டும். 30 விநாடிகள் அதே நிலையில் வைத்துவிட்டு பின்பு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். இதேபோல் 10 முறை பயிற்சி செய்ய வேண்டும்.

சிம்ஹா முத்திரை: இது யோகாவை ஒத்திருக்கும் உடற்பயிற்சியாகும். கன்னம் மற்றும் முகத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க இது உதவும். இரட்டை கன்னம் பிரச்சினைக்கு நல்ல தீர்வை வழங்கும் பயனுள்ள உடற்பயிற்சியாகவும் அமைந்திருக்கிறது. முதலில் கால்களை மடித்தபடி அமர்ந்து கொள்ளவும். தலையை நேராக வைத்துக்கொள்ளவும். கைகளை தொடையின் மீது வைத்தபடி சட்டென்று நாக்கை வெளியே நீட்டிய நிலையில் சிங்கத்தின் கர்ஜனை போன்று சில விநாடிகள் அமர்ந்திருக்கவும். அப்போது மூச்சை ஆழமாக உள் இழுத்து வெளியே விட்டபடி சுவாசிக்க

வேண்டும். பின்பு இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம். அதே போல தொடர்ந்து ஐந்து முறை பயிற்சி செய்ய வேண்டும்.

வாய் மெல்லுதல்: இந்த பயிற்சி எலும்புகள் மற்றும் கன்னத்திற்கு பயனளிக்கக்கூடியது. வாய்க்குள் எதுவும் இல்லாமல் மூடிய நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு வாயினுள் எதுவும் இல்லாமலேயே எதையாவது சாப்பிடுவது போல் மென்றபடி இருக்க வேண்டும். அந்த சமயத்தில் தாடையை நன்றாக அசைக்கவும். வாய் மூடிய நிலையில் இருப்பதால் மூக்கு வழியாக சுவாசத்தை தொடர வேண்டும். அப்படி மெல்லும்போது தாடை தொடர்ச்சியான இயக்கத்தில் இருப்பதால் அந்த பகுதியில் சேர்ந்திருக்கும் கூடுதல் கொழுப்பு குறைவதற்கு வழிவகுக்கும். மேலும் இந்த பயிற்சியின்போது ஒவ்வொரு முறையும் கன்னத்தை தூக்கும்போது தாடை தசைகளும் வலுப்படும்.

காற்று: வாய்க்குள் காற்றை குவித்துவைத்துக்கொண்டு பின்பு வாயை நன்றாக மூடிக்கொள்ளவும். அதன் பிறகு கன்னத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு காற்றை கடத்தி வாய் கொப்பளிப்பதுபோல் பயிற்சி மேற்கொள்ளவும். பின்பு மற்றொரு கன்னத்திற்கு காற்றை கடத்தி பயிற்சியை தொடரவும். இதுபோல் 10 நிமிடங்கள் செய்து வரலாம். தினமும் இவ்வாறு பயிற்சி செய்வது

தாடையில் கொழுப்பு சேர்வதை தடுத்து முக அழகை மெருகேற்றும்.

தாடை பயிற்சி:

1. இரு உள்ளங்கைகளையும் தாடையின் அடிப்பகுதியில் குவித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு தாடை மீது கைகளை அழுத்தியபடி கழுத்தை மேல் நோக்கி உயர்த்திவிட்டு பின்பு இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு கழுத்தை மேலும் கீழும் அசைத்து ஐந்து முறை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

2. தாடைக்கு அடியில் இரு உள்ளங்கைகளையும் நன்றாக அழுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி அழுத்தம் கொடுத்தபடியே வி வடிவத்தில் கன்னத்தின் பக்கவாட்டு பகுதி வழியே கைகளை அழுத்தி காது வரை கொண்டு செல்ல வேண்டும். அப்படியே தாடையில் இருந்து கைகளை காது அருகில் அழுத்தியபடி 10 முறை பயிற்சி செய்ய வேண்டும்.

3. தாடையின் அடிப்பகுதியில் இரு கட்டை விரல்களையும் நேர்கோட்டில் அழுத்திவைத்துக்கொள்ள வேண்டும். அதுபோல் ஆள்காட்டி விரல்கள் இரண்டையும் உதட்டின் கீழ் பகுதியில் குவித்துவைத்துக்கொள்ள வேண்டும். பின்பு இரு கட்டை விரல்களையும் நன்றாக அழுத்தியபடி தாடையின் மேல் பகுதிவரை நீவி விட வேண்டும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும்.

4. தாடையின் அடிப்பகுதியில் இரு கட்டைவிரல்களையும், உதட்டின் கீழ் புறத்தில் இரு ஆள்காட்டி விரல்களையும் ஒன்றாக சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது தாடைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக இரு ஆள் காட்டி விரல்களை கொண்டு உதட்டின் கீழ் பகுதியில் அழுத்தியபடி தாடையை நோக்கி நீவி விட வேண்டும். இப்படி இரு விரல்களையும் கீழ்நோக்கி நீவி 10 முறை செய்ய வேண்டும்.

5. இடது கை விரல்களில் இரண்டையும், வலது கை விரல்களில் இரண்டையும் தாடையின் அடிப்பகுதியில் வைத்து மேல் நோக்கி அழுத்தியபடி உதட்டின் அடிப்பகுதிவரை நீவி விட வேண்டும். அப்படி நான்கு விரல்களை கொண்டு தாடையின் அடிப்பகுதிக்கு அழுத்தம் கொடுத்தபடி 10 முறை செய்ய வேண்டும்.

இந்த ஐந்து பயிற்சி முறைகளையும் தினமும் இரண்டு முறை என இரண்டு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம். தாடையின் அடியில் கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படுவதுடன் அழகிய முக பொலிவையும் பெறலாம்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை