கொல்கத்தா,
ஆசியாவின் பழமையான மற்றும் மிக பெரிய சிவப்பு விளக்கு பகுதி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் அமைந்துள்ள சோனாகாச்சி பகுதியாகும். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட இந்த சிவப்பு விளக்கு பகுதியில் அன்றாட தேவைகளை எதிர்கொள்ள மற்றும் குடும்பத்தின் தினசரி செலவுகளுக்காக பாலியல் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.
நாட்டில் கடந்த ஆண்டு பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்ட பின்பு நிலைமை மோசமடைந்தது. இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது.
எனினும், சோனாகாச்சி பகுதியில் வசிப்போர், பல தேர்தல்கள் வந்து போயுள்ளன. ஆனால், எதுவும் மாறவில்லை. அரசியல் தலைவர்களிடம் இருந்து அவர்கள் எதனையும் பெறவில்லை. எவற்றையும் எதிர்நோக்கியும் அவர்கள் இருக்கவில்லை.
அதனால், பளபள வார்த்தைகளால் மோசடிக்கு ஆளாக கூடாது என அவர்கள் முடிவு எடுத்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் வசித்து வரும் அபராஜிதா என்பவர் நம்பிக்கையுடன் கூறும்பொழுது, வாக்கு எனது தனியுரிமை. அதனை தகுதியற்ற எந்தவொரு வேட்பாளருக்கும் செல்ல நான் விடமாட்டேன்.
நாங்கள் நம்பி கொண்டிருந்த எந்த விசயமும் நிறைவேறாத நபரிடம் இருந்து நாங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? அதற்கு நான் நோட்டாவை பதிவு செய்து விடுவேன் என கூறினார்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலான சூழலில், ஒரு தலைவர் இந்த பகுதிக்கு வந்து பெயர் பட்டியலை கேட்டுள்ளார். ரேசன் பொருட்கள் கிடைக்க உதவி செய்கிறேன் என கூறியுள்ளார். ஒரு வாரத்திற்குள் 6 ஆயிரம் பெயர்களை கொண்ட பட்டியல் தயாரானது.
அதனை அவர் வாங்கி சென்ற பின் இன்னும் எந்த ரேசன் பொருளும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. சோனாகாச்சியில் 8 ஆயிரம் விபசாரம் செய்யும் இடங்கள் உள்ளன. இதுதவிர 4 ஆயிரம் பிளையர்கள் (பாலியல் தொழிலாளர்கள் தங்கி பணி செய்வதில்லை) உள்ளன.
இங்குள்ள சீமா போக்லா என்ற பாலியல் தொழிலாளர் கூறும்பொழுது, அரசியல் தலைவர்கள் அவர்களது விருப்பத்திற்காக எங்களிடம் வருகிறார்கள். எங்களுக்காகவோ, எங்களுடைய விருப்பத்திற்காகவோ அவர்கள் வருவதில்லை.
எங்களுக்கு யாரும் துணையாக நிற்பதில்லை. தலைவர்களிடம் இருந்து நாங்கள் எதனையும் பெறவில்லை என கூறியுள்ளார்.
தர்பார் மகிளா சாமன்வாயா கமிட்டி என்றொரு அரசு சாரா அமைப்பு பாலியல் தொழிலாளர்களின் சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறது. இதன் இயக்குனர் மற்றும் தலைமை ஆலோசகர் டாக்டர் ஜனா என்பவர் கூறும்பொழுது, நம்பிக்கைக்கான வார்த்தைகளை கேட்ட பின்னர், எந்த மாற்றமும் தென்படவில்லை என்றால், வருத்தம் ஏற்படுவது சகஜம்.
அரசியல்வாதிகள் ஒரே ஒரு முறை வருகிறார்கள். அது தேர்தலுக்காக என்று கூறுகிறார். ஊரடங்கில் அதிகம் பாதிக்கப்பட்ட விசயங்களை எடுத்துரைத்த பிசாகா நோஷ்கர் என்ற பாலியல் தொழிலாளர், நாங்களும் இந்நாட்டின் குடிமக்கள். வாக்குரிமையை நாங்கள் நிச்சயம் பயன்படுத்துவோம்.
ஆனால், உண்மையில் தேவையானபொழுது எங்களுக்கு எந்த உதவி கரமும் கிடைக்கவில்லை. அதனால் இந்த முறை போலி வாக்குறுதிகளை அளித்து மோசடி செய்ய எந்த கட்சியையும் நாங்கள் அனுமதிக்க போவதில்லை என கூறுகிறார்.
எங்களை ஒருவரும் முறையாக பார்ப்பதில்லை. பல போராட்டங்களுக்கு பின்பும் இன்று வரை எங்களை ஒருவரும் ஏற்று கொள்ளவில்லை. சமூகத்தில் நாங்கள் ஏற்று கொள்ளப்பட்டால், ஒரு குடிமகளாக எங்களுக்கு கிடைப்பனவற்றையாவது நாங்கள் பெற்றிருப்போம்.
ஒரு சிறு உதவிக்காக வீடு, வீடாக சென்று கதவை தட்டினோம். ஆனால் பதிலுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என கூறியுள்ளார். இந்த பகுதியின் ஒவ்வொரு மூலையிலும் போலியான உறுதிமொழிகள் பல ஆண்டுகளாக நிரம்பி கிடக்கின்றன.
ஷெபாலி என்ற பாலியல் தொழிலாளர் கூறும்பொழுது, நாங்கள் 12 ஆயிரம் பேர் வரை இருப்போம். எந்தவொரு அரசியல் கட்சிக்கும் இந்த எண்ணிக்கையிலான நபர்கள் தேவை. ஆனால், எங்களை பற்றி நாடாளுமன்றத்தில் யாரேனும் பேசி கேட்டிருக்கிறீர்களா?
அரசியல் தலைவர்களின் இனிமையான வார்த்தைகள், நாங்கள் வாக்கு இயந்திரங்களில் கட்சி சின்ன முத்திரையை பதிக்கும் வரையே நீடிக்கும் என குமுறியுள்ளார்.
தேவை ஏற்படும்பொழுது, அவர்களுக்கு அவர்களே உதவியாக இருந்துள்ளனர். உறுதுணையாக நின்றுள்ளனர். தலைவர்களோ அல்லது அரசியல் புகலிடமோ அவர்களுக்கு உதவவில்லை என பலர் கூறுகின்றனர். நோட்டாவுக்கு வாக்களிக்கவே விரும்புகிறோம். அதுவே சிறந்த வழி என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர்.