செய்திகள்

தமிழ் மொழியை ஒற்றை மொழிப்பாட முறைக்கு மாணவர்களை தள்ளுவது ஆபத்தானது டாக்டர் ராமதாஸ் அறிக்கை

தமிழ் மொழியை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒற்றை மொழிப்பாட முறைக்கு மாணவர்களை தள்ளுவது மிகவும் ஆபத்தானது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் இப்போது நடைமுறையில் உள்ள 2 மொழிப்பாட முறையை கைவிடலாம் என்றும், அதற்கு மாற்றாக ஒற்றை மொழிப்பாட முறையை அறிமுகப்படுத்தலாம் என்றும் தமிழக அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. இந்த யோசனையை தமிழக அரசு ஏற்குமா? என்பது தெரியவில்லை. மொழிப்பாடத்தின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டம் எந்த வகையிலும் சரியானதாக தோன்றவில்லை.

அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தமிழை தவிர்த்து விட்டு, ஆங்கிலத்தை மட்டும் படிக்கும்போது அவர்கள் தாய்மொழி இலக்கணமே தெரியாதவர்களாக மாறுவார்கள். இது தமிழ் மொழியை அழிவுப்பாதைக்கு தான் அழைத்து செல்லும். மாணவர்கள் தமிழைப் படிக்க வேண்டும், தமிழில் படிக்க வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. ஆங்கில வழிக்கல்வி முறைக்கு முடிவு கட்டி விட்டு, தமிழை பயிற்று மொழியாக அறிவிக்கவேண்டும்; அதேநேரத்தில் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு ஆங்கில பாடத்தை சிறப்பாக பயிற்றுவிக்கவேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஒருபுறம் தமிழில் படித்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்று அறிவித்து விட்டு, மறுபுறம் தமிழை படிக்காமல் இருப்பதற்கு வகை செய்வது எந்த முறையில் நியாயம்? என்பதை பள்ளிக்கல்வித்துறை விளக்கவேண்டும். ஒற்றை மொழிப்பாட முறைக்கு மாணவர்களை தள்ளும் முறை மிகவும் ஆபத்தானது என்பதால், அதுகுறித்த பரிந்துரையை தமிழக அரசு நிராகரிக்கவேண்டும். ஒற்றை மொழிப்பாட முறையை அறிமுகப்படுத்தும் எண்ணம் எதுவுமில்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். இது சற்று நிம்மதி அளிக்கிறது.

எனினும் மக்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் இருக்கும் அச்சம் முழுமையாக விலகவில்லை. அந்த அச்சத்தை முற்றிலுமாக போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். எனவே ஒற்றை மொழிப்பாட முறை அறிமுகம் செய்யப்படாது; இப்போது உள்ளவாறே 4 முதன்மை பாடங்கள், 2 மொழிப்பாடங்கள் என 6 பாடங்கள் முறை தொடரும் என்றும் அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்