திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரியில் கடந்த 7-ந் தேதி மீன் பிடிக்கும் தகராறில் கூணங்குப்பம் மீனவர்கள் தாக்கியதில் நடுவூர்மாதாகுப்பம் மீனவர்கள் 7 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக நடுவூர்மாதாகுப்பம் மீனவர்கள் அளித்த புகாரின் பேரில், திருப்பாலைவனம் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கூணங்குப்பம் மீனவர்கள் 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட கூணங்குப்பம் மீனவர்கள் அனைவரையும் கைது செய்ய கோரி 12 கிராம மீனவமக்கள் பழவேற்காடு பஜாரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் சப்-கலெக்டர் ஐஸ்வர்யாராமநாதன் உறுதியளிப்பின் பேரில், 4 மணி நேர சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக கூணங்குப்பம் மீனவர்கள் மேலும் 10 பேரை திருப்பாலைவனம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.