தமிழக செய்திகள்

10 சதவீத இடஒதுக்கீடு: மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் விசாரணை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதுதொடர்பான சட்டமசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, இடஒதுக்கீடு என்பது சாதி ரீதியாகத்தான் வழங்க முடியுமே தவிர, பொருளாதார வசதிகளின் அடிப்படையில் வழங்க முடியாது என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, சுப்ரீம் கோர்ட்டும் பல வழக்குகளில், இதை உறுதி செய்து பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

இவையெல்லாம் தெரிந்திருந்தும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டத்துக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்து விட்டார். இந்த இடஒதுக்கீடு சட்டமே, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை தன்மையையே ஆட்டம் காண வைக்கிறது.

அதுமட்டுமல்ல, பொருளாதாரத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரிக்க முடியாது. இன்று ஏழையாக இருப்பவர் நாளை பணக்காரராக மாறிவிடலாம். ஆனால், சமூக ரீதியாக பல நூற்றாண்டுகளாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதால், அப்படிப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

அதனால், எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்குத்தான் இடஒதுக்கீடு வழங்க முடியுமே தவிர, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு என்று கூறி பொதுப்பிரிவினருக்கு வழங்க முடியாது. அதுவும், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்று கூறுகின்றனர் என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள் குறிப்பிட்டு, அந்த சட்ட மசோதாவில் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமான பெறுபவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு மூத்த வக்கீல் வில்சன், சட்ட மசோதாவில் குறிப்பிடவில்லை. ஆனால், கடந்த 7-ந் தேதி நடந்த மந்திரி சபை கூட்டத்தில், மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்றார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தில், பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை வழங்கலாம் என்று கூறியுள்ளதே? என்று நீதிபதிகள் மற்றொரு கேள்வியை எழுப்பினர்.

அதற்கு மூத்த வக்கீல், பின்தங்கியவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் சாதி ரீதியாக பின்தங்கியவர்களே தவிர, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் கிடையாது. எனவே, இந்த சட்ட மசோதாவே அரசியல் அமைப்புச்சட்டத்துக்கு எதிரானது என்பதால், இதை செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், மனுதாரர் சார்ந்துள்ள கட்சி, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு, அதாவது முற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு எதிரான கொள்கைகளை கொண்டது. இதை பொதுநல வழக்காகவே கருத முடியாது. தன் கட்சியின் கொள்கையின் அடிப்படையில்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் மாநிலங்களவை உறுப்பினர். இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ மனுதாரர் ஓட்டு போட்டிருந்தாலும், அந்த நடைமுறையில் அவர் கலந்துக் கொண்டுள்ளார். எனவே, அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பான மாநிலங்களவையில் தோல்வி அடைந்த மனுதாரர், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் மற்றொரு அமைப்பான ஐகோர்ட்டை தவறாக பயன்படுத்துகிறார். எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று வாதிட்டார்.

மனுதாரர் தி.மு.க.வை சேர்ந்தவர் என்றும், ஐகோர்ட்டை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறியதற்கு, மனுதாரர் வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த 10 சதவீத இடஒதுக்கீடு யாருக்கு? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், இடஒதுக்கீடு பெறாதவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கியிருப்பவர்களுக்கு என்று கூறினார்.

அவர்கள் யார்?. இடஒதுக்கீடு பெறாதவர்கள் என்றால், முற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் தானே? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இந்த வழக்கிற்கு மத்திய அரசு சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர், மத்திய சமூக நீதித்துறை செயலாளர் ஆகியோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு