சென்னை,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.
ரேங்க் பட்டியல் முறையை கல்வித்துறை ரத்து செய்து, தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான், இந்த ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இன்று காலை (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில், 95.2 சதவீதம் மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 93.3 சதவீதமாகவும்,மாணவிகள் தேர்ச்சி விகிதம் 97 சதவீதமாகவும் உள்ளது. 6,100 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்கள்
திருப்பூர்- 98.53 சதவீதம்
ராமநாதபுரம்- 98.48 சதவீதம்
நாமக்கல்-98.45 சதவீதம்
ஈரோடு -98.41 சதவீதம்
கன்னியாகுமரி -98.08 சதவீதம்
பாடவாரியான தேர்ச்சி விகிதம்:
தமிழ் : 96.12 சதவீதம்
ஆங்கிலம் : 97.35 சதவீதம்
கணிதம்: 96.46 சதவீதம்
அறிவியல்: 98.56 சதவீதம்
சமூக அறிவியல்: 97.07 சதவீதம்
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 6100..