தமிழக செய்திகள்

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி 15 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி 15 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

சென்னை,

இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் வருகிற 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சிக்கு மக்களை ஈர்க்கும் வகையில் முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி நேற்று சென்னை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் பாரதீய கானத்தான் என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 15 ஆயிரம் மாணவிகள் பங்கேற்று நாட்டுப்பற்று, பெண்மை, ஆசிரியர், பெற்றோர், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பெருமைகளை பறைசாற்றும் வகையில் பாடினார்கள்.

பல மொழிகளில்

தமிழ், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, மலையாளம், பெங்காலி உள்பட பல மொழிகளில் பாடி அசத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாணவிகளுடன் பிரபல பாடகிகளான நித்யஸ்ரீ மகாதேவன், ரஞ்சனி, காயத்ரி, வித்யா கல்யாணராமன், வினயா, சுசித்ரா பாலசுப்ரமணியன், கிர்த்திகா நடராஜன், சஹானா, அஸ்விதா, ஐஸ்வர்யா, அக்ஷயா மற்றும் கிராமி விருது பெற்ற சர்வதேச இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இசை நிகழ்ச்சியை ராம்ஜி என்பவர் வழிநடத்தினார். இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் ராஜலட்சுமி வரவேற்றார்.

பேரியக்கமாக...

இதுகுறித்து துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்மிக இயக்கங்களை சேவையில் ஈடுபடுத்துவது தான் இந்த கண்காட்சியின் நோக்கம். கலாசாரம், ஆன்மிகம், வாழ்வியல் முறைகளை உள்ளடக்கிய இயற்கையை ஒட்டிய நமது வாழ்க்கை முறை மறைந்துகொண்டிருக்கிறது. இழந்த அந்த வாழ்க்கையை மீட்டு கொண்டுவரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

இந்த காலத்துக்கு தேவையான நமது கலாசார வாழ்க்கை முறையை உருவாக்கவேண்டும். மேலும் அது வாழ்க்கை முறை சம்பந்தப்பட்ட பேரியக்கமாக வளரவேண்டும் என்பதற்காகத்தான் ஆன்மிக கண்காட்சி என்ற இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு