தமிழக செய்திகள்

17 மீனவர்கள் கைது - மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

17 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் உடனடியாக அவர்களை விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14-9-2023) கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் (பதிவு எண்கள் IND-TN-10-MM-407, IND-TN-08-MM-214 and IND-TN-16-MM-2046) மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி. இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாகவும், இது தமிழ்நாட்டு மீனவர்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இந்த மீனவர்ககளின் படகுகள் கடலுக்குள் தெளிவான எல்லை நிர்ணயம் மற்றும் எல்லை தொடர்பான வரையறைகள் ஏதும் இல்லாததால், சில நேரங்களில் தற்செயலாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் சென்று விடுகிறது. இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மீனவ சமுதாயத்தினரிடையே பதற்றம் அதிகரித்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்திட ஏதுவாக, இலங்கை அரசுடன் உடனடியாகத் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி அவர்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்வில் அமைதியை ஏற்படுத்திடவும், இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைக் காணவும், இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்ற தனது முந்தைய கோரிக்கையினை மீண்டும் இத்தருணத்தில் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்