சென்னை,
தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை பெரம்பூர் ரெயில்வே மைதானத்தில் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தேசிய கொடியை ஏற்றிவைத்து ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-
கொரோனாவை கட்டுப்படுத்த ரெயில்வே டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் போராடி வருகிறார்கள். இந்த கொலைகார வைரசுக்கு எதிராக பணி செய்து சிறப்பான சிகிச்சை அளிக்கும் அவர்களின் தன்னலமற்ற சேவைக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். சென்னை பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனை கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதில் மற்ற ரெயில்வே மருத்துவமனைக்கு முன்மாதிரியாக இருக்கிறது.
தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகம், ரெயில்வே பணிமனைகள் உள்பட 6 கோட்டங்களில் இதுவரை 969 ரெயில்வே ஊழியர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 606 பேர் பூரண குணமடைந்து உள்ளனர். 363 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தெற்கு ரெயில்வே 2019-2020-ம் ஆண்டு ரூ.8,571.26 கோடி வருமானம் ஈட்டி உள்ளது. இதில் பயணிகள் மூலம் ரூ.4,587 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 2.3 சதவீதம் அதிகமாகும். மேலும் 2019 ஏப்ரல் மாதம் முதல் 2020 மார்ச் மாதம் வரை சரக்குகள் கையாண்டதன் மூலம் ரூ.2,755.38 கோடி தெற்கு ரெயில்வே வருமானம் ஈட்டியது.
தெற்கு ரெயில்வேயில் 29 ரெயில் நிலையங்கள் விமான நிலைய தரத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மேலும் 160 ரெயில் நிலையங்கள் விமான நிலைய தரத்துக்கு மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 544 ரெயில் நிலையங்களில் வை-பை வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பிரேந்திரகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல் சென்னை ரெயில்வே கோட்டத்தில் கோட்ட மேலாளர் பி.மகேஷ் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது கொரோனாவுக்கு பிளாஸ்மா தானம் அளித்த 32 ரெயில்வே பாதுகாப்பு படையினரை அவர் பாராட்டினார்.