திருவாரூர்,
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பழமையான ஐம்பொன் சிலைகள் மாற்றப்பட்டுள்ளன என புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளின் உண்மை தன்மை குறித்து கடந்த செப்டம்பர் மாதம் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீசார் சிலைகளை ஆய்வு செய்தனர். அப்போது சிலைகள் மாற்றப்பட்டு இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தொல்லியல்துறையுடன் இணைந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 11-ந் தேதி நடத்திய ஆய்வின்போதும் சிலைகள் மாற்றப்பட்டு இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து தஞ்சை பெரிய கோவிலில் உள்ள 41 சிலைகளில் 38 சிலைகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்யப்பட்டன. மீதமுள்ள 3 சிலைகள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன.
தஞ்சை பெரிய கோவிலில் ஆய்வை முடித்துவிட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் திருவாரூர் சென்றனர். திருவாரூரில் தியாகராஜர் கோவில் மேற்கு கோபுரவாசல் பகுதியில் உலோக திருமேனி பாதுகாப்பு மையம் என்கிற சிலைகள் பாதுகாப்பு மையம் உள்ளது. இங்கு 625 கோவில்களை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐம்பொன் மற்றும் உலோக சாமி சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
அவர்கள் காலை 11 மணிக்கு ஆய்வை தொடங்கினர். இந்த ஆய்வு பல மணி நேரம் நீடித்தது. இங்கு 625 கோவில்களை சேர்ந்த 4,359 சிலைகளில் 87 சிலைகள் இதுவரை பரிசோதிக்கப்பட்டன. மீதமுள்ள சிலைகள் இன்று பரிசோதனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், இன்று 2வது நாளாக பாதுகாப்பு மையத்தில் ஆய்வு நடந்து வருகிறது. சிலைகளின் தொன்மை தன்மை மற்றும் அவற்றின் எடை, உலோகங்களின் உண்மை தன்மை போன்றவற்றை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.