ஆலந்தூர்,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 64 லட்சத்து 26 ஆயிரத்து 860 தடுப்பூசிகள் வந்து உள்ளன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி சென்று மத்திய சுகாதார துறை அதிகாரிகளிடம் தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கும்படி வலியுறுத்தினார். இதையடுத்து 3 தினங்களில் தமிழகத்துக்கு 15 லட்சம் தடுப்பூசிகளை அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு புனேவில் இருந்து பெங்களூரு வழியாக 42 பெட்டிகளில் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. விமான நிலையத்தில் இருந்து அவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
சென்னை வந்த தடுப்பூசிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் உடனடியாக பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.