பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தெற்கு மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 42). இவரது மகள் பானுஸ்ரீ (4). இந்த நிலையில் சிறுமி பானுஸ்ரீ காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். இதையடுத்து பாஸ்கர் தனது மகள் பானுஸ்ரீயை கடந்த 2 நாட்களுக்கு முன்பு காடாம்புலியூரில் உள்ள ஒரு தனியார் கிளீனிக்கிற்கு அழைத்து சென்றார். அங்கிருந்த டாக்டர், சிறுமியை பரிசோதனை செய்து 2 ஊசிகள் போட்டதோடு, மருந்து, மாத்திரைகளையும் வழங்கினார்.
இருப்பினும் உடல் நிலை சரியாகாமல் மேலும் பாதிக்கப்பட்டது. சிறுமியின் உடலில் கொப்பளம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து நேற்று காலை பானுஸ்ரீயை சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு பாஸ்கர் கொண்டு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், பானுஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காடாம்புலியூர் பஸ் நிறுத்தம் அருகே சென்னை -கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தவறான சிகிச்சை
அப்போது கிளீனிக்கில் டாக்டர் தவறான சிகிச்சை அளித்ததால்தான் பானுஸ்ரீ இறந்துவிட்டாள். எனவே சம்பந்தப்பட்ட டாக்டரை உடனே கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இது குறித்த தகவலின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்ததும் பானுஸ்ரீ சாவு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.